தமிழ்நாட்டு தொழில் முதலீடுகள் ஆந்திராவுக்கு போகுதா?….. உண்மையை உடைத்த ரோஜா…. அலறிய அரசியல் களம்….!

By Nanthini on புரட்டாதி 20, 2026

Spread the love

டி.டி. பாலச்சந்திரன் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையமைப்பில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள ‘லெனின் பாண்டியன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தர்ஷன் கணேசன், ஸ்ரிதா ராவ், கங்கை அமரன், ஜார்ஜ் மரியன், போஸ் வெங்கட் ஆகியோருடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான ரோஜாவும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற நடிகை ரோஜா, திரைத்துறை மற்றும் அரசியல் சார்ந்த பல்வேறு கேள்விகளுக்கு விரிவாகப் பதிலளித்தார்.

ஆந்திர மாநில அரசியலில் முதலீடுகள் ஈர்க்கப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “சந்திரபாபு நாயுடு ஆந்திர முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு புதிதாகப் பெரிய தொழில் முதலீடுகள் எதுவும் வரவில்லை” என்று குற்றம்சாட்டினார். ஊடகங்களைத் தங்கள் கைவசம் வைத்துள்ளதால் செய்யாத சாதனைகளையும் செய்துவிட்டதாக விளம்பரம் செய்கிறார்கள் எனக் குறிப்பிட்ட ரோஜா, ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்காலத்தில் அம்பானி, அதானி போன்ற முன்னணி தொழிலதிபர்களை அழைத்து வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், தற்போது சந்திரபாபு நாயுடு ஆட்சியில் தலைநகர் சார்ந்த திட்டங்கள் உட்பட பலவும் வெறும் ‘கிராபிக்ஸ்’ காட்சிகளாக மட்டுமே உள்ளதாகவும் காரசாரமாகத் விமர்சித்தார்.

   

தொடர்ந்து, “தமிழ்நாட்டு அரசியலுக்கு நீங்கள் வருவீர்களா?” என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மா கூப்பிடும்போதே நான் தமிழ்நாட்டு அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், ‘நாம் எங்குத் தோற்றோமோ அங்குதான் ஜெயித்துக் காட்ட வேண்டும்; அங்கிருந்து ஓடிவந்தால் நம் மீதான மரியாதை போய்விடும்’ என்று என் கணவர் ஆர்.கே. செல்வமணி கூறினார். அதனால்தான் ஆந்திர அரசியலிலேயே தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன். இங்கு தமிழ்நாட்டு அரசியலுக்கு வரும் திட்டம் எதுவும் இல்லை” என்று தெளிவுபடுத்தினார்.

   

செய்தியாளர்கள் தொடர்ந்து அரசியல் ரீதியான கேள்விகளை எழுப்ப முயன்றபோது, படத்தில் நடித்துள்ள கங்கை அமரன் குறுக்கிட்டு, “எங்களை வம்பில் மாட்டிவிட்டு விடாதீர்கள்” என்று நகைச்சுவையாகப் பேசிச் சூழலை கலகலப்பாக்கினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையுலகிற்கு மீண்டும் வந்துள்ள நடிகை ரோஜாவின் இந்த அரசியல் கருத்துகள் தற்பொழுது சமூக வலைதளங்களிலும் திரை வட்டாரத்திலும் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன.