திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சொந்தமான ரூபாய் 50 கோடி மதிப்பிலான நிலத்தை ஆக்கிரமித்ததாக திமுக பகுதிச் செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள விவகாரம், தமிழக அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ், “தமிழகத்தில் எந்தப் பகுதியில் கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் அது தொடர்பான புகார்களை அளித்தால் உடனடியாகத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இச்சம்பவத்தைக் சுட்டிக்காட்டி தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணி தனது எக்ஸ் (X) தளத்தில் திமுகவை கடுமையாக விமர்சித்துப் பதிவிட்டுள்ளது. “பெருமாளுக்கே பட்டை நாமம் சாத்திய பவளவிழா பாப்பா” எனக் குறிப்பிட்டுள்ள அப்பதிவில், ஸ்ரீரங்கம் கோயில் நிலத்தின் மூலப்பத்திரம் காணாமல் போய்விட்டது என்ற பொய்யான கதையைக் கூறி, திமுக பகுதிச் செயலாளர் அந்நிலத்தைத் தனது பெயருக்கு மாற்றிக் கொண்டதாகக் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், “ஊழலின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் திமுக, அறிவியல் பூர்வமாக ஊழல் செய்யும் வித்தையைத் தனது விழுதுகளுக்குக் கற்றுக்கொடுத்ததன் விளைவே இந்தக் கோயில் நில அபகரிப்பு” என்றும் அதில் காட்டமாகப் பதிவிடப்பட்டுள்ளது.
“சிவன் சொத்து குலநாசம்” என்று மேடைகளில் வசனம் பேசிய திமுக, “அரியும் சிவனும் ஒண்ணு” என்பதை வசதியாக மறந்துவிட்டதாகச் சாடியுள்ள தவெக, அறநிலையத் துறையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிடும் அரசுக்கு, கோயில் நிலத்தில்தான் தனது கட்சி அலுவலகம் இயங்குகிறது என்பது தெரியாதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. அதோடு, வெற்றித் தலைவர் தலைமையிலான வருங்கால ஆட்சியில் மக்கள் பணத்தையும், அரசுச் சொத்துக்களையும் சுரண்டியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தவெக ஐடி விங் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே, கடந்த ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த எ.வ.வேலு, கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோரின் இல்லங்களில் தொடர் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இச்சூழலில், கோயில் நில ஆக்கிரமிப்புகள் குறித்துப் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என அமைச்சர் ரமேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளதைத் தொடர்ந்து, கடந்த கால திமுக ஆட்சியின் பல்வேறு முறைகேடுகள் தொடர்பான புகார்கள் அடுத்தடுத்து வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
