தமிழகத்தில் டாஸ்மாக் நிர்வாகத்தை சீரமைக்கும் நோக்கில் அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. முதற்கட்டமாக, குடியிருப்பு பகுதிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டு வந்த 707 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனைத் தொடர்ந்து, பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கக் கூடாது என்ற கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது பெரும்பாலான கடைகளில் இந்த முறைகேடு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், மதுப்பிரியர்கள் விரும்பும் குறிப்பிட்ட பிராண்டுகள் கடைகளில் கிடைப்பதில்லை என்றும், ஊழியர்கள் தங்களுக்கு விருப்பமான பிராண்டுகளையே விற்க முயல்வதாகவும் புகார்கள் எழுந்து வந்தன. இந்த குளறுபடிக்கு தீர்வு காணும் வகையில், சில்லறை விற்பனை கடைகளுக்கு சரக்கு விநியோகம் செய்யும் நடைமுறையில் தமிழக அரசு புதிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது.
செப்டம்பர் 21 முதல் அமலுக்கு வரும் இந்த புதிய உத்தரவின்படி, இதுவரை பின்பற்றப்பட்டு வந்த ‘சம பங்கீடு’ முறை ரத்து செய்யப்பட்டு, ஒவ்வொரு கடையின் தேவை மற்றும் விற்பனை கோரிக்கையின் அடிப்படையில் மட்டுமே சரக்குகள் அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் விற்பனையாகாமல் தேங்கி கிடக்கும் பிராண்டுகளின் அளவு குறைவதுடன், வாடிக்கையாளர்கள் கேட்கும் பிரபல பிராண்டுகள் தடையின்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதால் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
