தமிழ் சினிமாவில் முதல் முதலில் பகுத்தறிவு மற்றும் முற்போக்கான கருத்துகளை தன்னுடைய நகைச்சுவை காட்சிகள் மூலம் பரப்பியவர் என் எஸ் கிருஷ்ணன். தமிழ் சினிமாவில் எம் ஜி ஆர், சிவாஜி உள்ளிட்டோர்களே மிகவும் மரியாதையாக நடத்திய நபர்களில் ஒருவர் என் எஸ் கே. நாடக மேடையில் இருந்து திரைப்படத்துக்குள் நுழைந்த அவர் அங்கும் தன்னுடைய நடிப்பால் புக்ழ் பெற்றார்.
முதலில் வில்லுப்பாட்டுக் கலைஞராக தனது வாழ்க்கையைத் துவங்கியவர் பின்னர் நாடக மேடைகளில் நடிக்க ஆரம்பித்து அதன்பின் சினிமாவிற்குள் நுழைந்தார். என் எஸ் கே மற்றொரு நல்ல குணம் அவரின் ஈகைதான். தமிழ் சினிமாவில் வள்ளல் என்று பெயர் பெற்ற எம் ஜி ஆருக்கு முன்னோடியாக இருந்தவர் என் எஸ் கே.
பகுத்தறிவு கருத்துகள் மட்டும் இல்லாமல் அறிவியல் பற்றியும் அதிகமாக பேசியுள்ளார். அவர் நடித்து அண்ணா வசனம் எழுதிய நல்லதம்பி படத்தில் இடம்பெற்ற ‘விஞ்ஞானத்த வளக்க போறேண்டி’ பாடலில் இப்போது நாம் வெகு சாதாரணமாகப் பயன்படுத்தும் மிக்ஸி, கிரைண்டர், வாட்டர் ஹீட்டர், மின் விசிறி மற்றும் சுவர்க் கடிகாரம் என பலவற்றை பற்றியும் கணவன் மனைவி சேர்ந்து பாடுவது போல பாடியுள்ளார்.
அந்த பாடலில் வரும் வரிகள்:-
நெல்லுகுத்த, மாவரைக்க, நீர் இறைக்க மிஷினு
அல்லும்,பகலும் ஆக்கி அடுக்க அதுக்கொரு மிஷினு
கொல்ல புரத்தில குழாய் வைக்கணும்
குளிரு மிஷினும் கூட வைக்கணும்
பள்ளிக்கூடத்துக்கு புள்ளைங்க போகாம
படிக்க கருவி பண்ணியும் வைக்கணும்..
முடிஞ்சுதா?.
ஒன்ன மறந்துட்டேன்..
என்னாம்மா?
பட்டனை தட்டி விட்டா ரெண்டு தட்டிலே
இட்டிலியும், காப்பி நம்ம பக்கத்தில் வந்திடணும்
கட்டிலுக்கு மேலே ஃபேனு காத்து சுத்தோணும்
காலம் காட்டும் கருவியும் வேணும்
போன்ற வரிகளைக் கேட்கும் மிகவும் ஆச்சர்யமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற என் எஸ் கே வின் ஆசை இந்த பாடலில் வெளிப்பட்டிருக்கும்.
