பிரபல காமெடி நடிகரான என்.எஸ் கிருஷ்ணன் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். கடந்த 1935-ஆம் ஆண்டு ரிலீசான மேனகா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இதனை எடுத்து எம்.ஜி.ஆரின் அறிமுக திரைப்படமான சசிலீலாவதி திரைப்படத்திலும் என் எஸ் கிருஷ்ணன் நடித்துள்ளார். என் எஸ் கிருஷ்ணனை கலைவாணர் என அழைத்தனர். தனது நகைச்சுவையால் யாரையும் துன்புறுத்தாமல் என்.எஸ் கிருஷ்ணன் சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பார். ஒரு முறை கிருஷ்ணன் மதுரைக்கு சென்றுள்ளார்.
அப்போது அவரது கார் டிரைவர் தினகர் ராஜ் காரை வேகமாக ஓட்டியுள்ளார். அதை பார்த்த என்.எஸ் கிருஷ்ணன் எப்பா ராஜ் நான் மதுரைக்கு மக்களை பார்க்க போகிறேன். நீ மக்கள் என்னை வந்து பார்க்கும்படி செய்து விடாதே என கூறியுள்ளார். அதன் பிறகு ராஜ் வேகத்தை குறைத்து காரை மெதுவாக ஓட்டியுள்ளார். இதனை தொடர்ந்து ஒரு முறை தனது மனைவி மதுரத்துடன் என்.எஸ் கிருஷ்ணன் நாகர்கோவிலுக்கு காரில் சென்றுள்ளார். நள்ளிரவு நேரத்தில் சிறிது நேரம் காரில் இருந்து இறங்கலாம் என நினைத்து கணவன் மனைவி இருவரும் இறங்கியுள்ளனர்.
சிறிது நேரம் கழித்து காற்றில் காரின் கதவு சாத்தியது போல சத்தம் கேட்டது. இதனால் ராஜ் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பியுள்ளார். இதனால் கோபமடைந்த மதுரம் நாம் ஏறினோமா இல்லையா என்று கூட பார்க்காமல் காரை எடுத்துவிட்டு சென்றுவிட்டான் என திட்டுகிறார். என்.எஸ் கிருஷ்ணன் தனது மனைவியை சமாதானம் செய்து கொண்டிருக்கும் போது கார் டிரைவர் மீண்டும் வந்து ஐயா மன்னித்து விடுங்கள் என கூறியுள்ளார்.
அடுத்த மாதத்தில் இருந்து ராஜுக்கு சம்பளத்தை உயர்த்து கொடு என கிருஷ்ணன் தனது மனைவியிடம் கூறியுள்ளார். அப்போது மதுரன் தப்பு பண்ணவனுக்கு எதுக்கு சம்பள உயர்வு என கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த என்.எஸ் கிருஷ்ணன் காரின் பின் இருக்கையில் கணவன் மனைவி இருக்கிறார்கள். அவர்கள் ஏதாவது பேசிக் கொண்டே வருவார்கள். நாம் பின்னால் எதற்காகவும் திரும்பி பார்க்க கூடாது என நினைத்து டிரைவர் அவரது வேலையை மட்டும் பார்த்துள்ளார். காற்றில் சாத்திய கதவை நாம்தான் சாத்தினோம் என நினைத்துக் கொண்டு சென்று விட்டான் என தெரிவித்துள்ளார்.