சென்னையை வந்தாரை வாழவைக்கும் ஊர் என்று கூறுவார்கள். அப்படி தமிழ்நாட்டில் உள்ள பிற மாவட்ட மக்கள் அனைவரும் சென்னையில் தான் வேலைக்காக குடியேறி இருக்கிறார்கள். சென்னையில் தினமும் நடக்கக்கூடிய பொதுவான பிரச்சினை கூட்ட நெரிசல். வேலைக்கு செல்வோர், படிப்புக்காக சொல்வோர் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். அது பேருந்து என்றாலும் சரி ரயில் அல்லது மெட்ரோ ரயில் ஆனாலும் சரி கூட்ட நெரிசலில் டிக்கெட் எடுப்பது என்பது மிகவும் சவாலான காரியம். அதற்கு முடிவு கட்ட தான் வந்திருக்கிறது “சிங்கார சென்னை ஸ்மார்ட் கார்டு” . இது என்ன இதனால் என்ன பயன் என்பதை பற்றி இனி காண்போம்.
மெட்ரோ ரயில்கள், எம்டிசி பேருந்துகள் மற்றும் மின்சார ரயில்களில் நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு ஏற்கும் பிற பிளாட்பார்ம்களிலும் பயணிகள் போக்குவரத்து சேவைகளை டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதற்கு ஏதுவான சிங்கார சென்னை ஸ்மார்ட் கார்டை போக்குவரத்து துறை அமைச்சர் அறிமுகப்படுத்தியுள்ளார். இதன் மூலம் பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்கலாம். இது பயன்பாட்டுக்கு வந்து விட்டது.
முன்னதாக இந்த சிங்காரச் சென்னை பயண அட்டை முதற்கட்டமாக மெட்ரோ ரயிலில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது மின்சார ரயில் மற்றும் அரசு பேருந்துகளிலும் பயன்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த சிங்கார சென்னை ஸ்மார்ட் கார்டு இருந்தால் நீண்ட நேரம் காத்திருந்து டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. பொதுமக்கள், பள்ளி கல்லூரிகளுக்கு செல்வோர், அவசரமாக அலுவலகங்களுக்கு செல்வோர் என அனைவருக்கும் இந்த சிங்கார சென்னை ஸ்மார்ட் கார்டு ஒரு சிறப்பான தேர்வாக இருக்கும்.
மெட்ரோ ரயில் மற்றும் மின்சார ரயில்களில் இந்த சிங்கார சென்னை ஸ்மார்ட் கார்டை ஸ்கேன் செய்து பயணிப்பது இனி மிகவும் எளிது. பேருந்துகளில் நடத்துனர்களிடம் இந்த ஸ்கேன் செய்யும் கருவி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மூன்று வகையான போக்குவரத்துகளிலும் மக்கள் இந்த ஒரே கார்டை பயன்படுத்தி பயணித்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட தொகையை கொடுத்து இந்த கார்டை ரீசார்ஜ் செய்து வைத்துக் கொண்டால் இந்த சேவையை மக்கள் ஸ்கேன் செய்வது மூலம் டிக்கெட் எடுக்காமல் ஃப்ரீயாக தினமும் நீங்கள் பயணிக்க முடியும். சென்னை நகரத்து மக்கள் இந்த கார்டுக்கு வெகுவாக வரவேற்பு அளித்து இருக்கிறார்கள்.