இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. இருப்பினும், பாதுகாப்பு மற்றும் தனியுரிமை குறித்த கவலைகளால் பலர் தங்கள் 12 இலக்க ஆதார் எண்ணைப் பகிரத் தயங்குகின்றனர். இத்தகைய சூழலில், பயனர்களின் தரவுகளைப் பாதுகாக்க ‘விர்ச்சுவல் ஐடி’ (Virtual ID – VID) ஒரு சிறந்த மாற்றாக அமைகிறது. இது 16 இலக்கங்களைக் கொண்ட ஒரு தற்காலிக அடையாள எண் ஆகும்.
இந்த விர்ச்சுவல் ஐடியை ஆதார் எண் தேவைப்படும் இடங்களான வங்கி கணக்குத் தொடங்குதல், இ-கேஒய்சி (e-KYC), இன்சூரன்ஸ் மற்றும் பாஸ்போர்ட் விண்ணப்பம் போன்ற அனைத்து சேவைகளுக்கும் பயன்படுத்தலாம். இதன் மூலம் உங்கள் உண்மையான ஆதார் எண் மற்றவர்களுக்குத் தெரியாது என்பதால், தரவு மோசடிகள் தவிர்க்கப்பட்டு முழுமையான பாதுகாப்பு கிடைக்கிறது. இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) இணையதளம் வழியாக இதனை எளிதாக உருவாக்க முடியும்.
ஆன்லைனில் விர்ச்சுவல் ஐடியைப் பெற, முதலில் UIDAI அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று மொழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அங்குள்ள ‘ஆதார் சர்வீசஸ்’ பிரிவில் ‘விர்ச்சுவல் ஐடி ஜெனரேட்டர்’ என்ற விருப்பத்தைத் தேர்வு செய்து, உங்கள் ஆதார் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட வேண்டும். பின்னர் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபி (OTP) எண்ணைச் சமர்ப்பித்தால், 16 இலக்க விர்ச்சுவல் ஐடி திரையில் தோன்றுவதுடன் எஸ்எம்எஸ் மூலமாகவும் அனுப்பி வைக்கப்படும்.
இணையதள வசதி இல்லாதவர்கள் எஸ்எம்எஸ் மூலமாகவும் விர்ச்சுவல் ஐடியைப் பெறலாம். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து RVID என டைப் செய்து, உங்கள் ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்கங்களைச் சேர்த்து 1947 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் சில வினாடிகளிலேயே உங்களுக்கான விர்ச்சுவல் ஐடி உங்கள் மொபைல் போனுக்கு வந்து சேரும். இதன் மூலம் பாதுகாப்பான முறையில் டிஜிட்டல் சேவைகளை மக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
