அமெரிக்காவின் பிரபல பொருளாதாரப் பேராசிரியர் ஜெஃப்ரி சாக்ஸ் (Jeffrey Sachs), வெனிசுலாவில் அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அடுத்த இலக்கு ஈரானாக இருக்கலாம் என்று எச்சரித்துள்ளார். 2026 புத்தாண்டு தொடக்கத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் டிரம்ப் நடத்திய சந்திப்பிலேயே இதற்கான சமிக்ஞைகள் கிடைத்துவிட்டதாகவும், ஈரான் தனது அணுசக்தித் திட்டங்களை மீண்டும் தொடங்கினால் அமெரிக்கா கடும் தாக்குதல் நடத்தும் என்று டிரம்ப் பகிரங்கமாக எச்சரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், அமெரிக்க வெளியுறவுக் கொள்கையைத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர்கள் தீர்மானிப்பதில்லை என்றும், மாறாக சிஐஏ (CIA) மற்றும் பென்டகன் போன்ற பாதுகாப்பு அமைப்புகளை உள்ளடக்கிய ‘டீப் ஸ்டேட்’ (Deep State) எனும் நிழல் அரசுதான் வழிநடத்துகிறது என்றும் சாக்ஸ் குற்றம்சாட்டியுள்ளார். ஈரானில் நடக்கும் மக்கள் போராட்டங்களைக் காரணமாகக் காட்டி, அங்கு ஆட்சி மாற்றத்தை (Regime Change) ஏற்படுத்த அமெரிக்கா ஆயத்தமாகி வருவதாகவும், இது வெனிசுலாவை விடப் பெரிய அளவிலான உலகளாவிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
