பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பாதுகாப்பு மற்றும் ஒழுக்கத்தை உறுதி செய்ய காவல்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைக் கண்காணிக்க 15 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், போதை அதிகமாகி நிலைகுலையும் நபர்களைப் பாதுகாப்பாகத் தடுத்து வைத்து, அவர்களின் முகவரியைப் பெற்று போலீசாரே வீடுகளில் கொண்டு போய் விடுவார்கள் என கர்நாடக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பாலியல் தொல்லைகளைத் தவிர்க்கவும் சுமார் 20 ஆயிரம் போலீசார் நகரம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
போக்குவரத்து நெரிசலைக் குறைக்க எம்.ஜி. ரோடு, சர்ச் தெரு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், 50-க்கும் மேற்பட்ட மேம்பாலங்கள் மூடப்பட உள்ளன. குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் மற்றும் மாநகரப் பேருந்து சேவைகள் அதிகாலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. விதிமீறல்கள் நடந்தால் 112 என்ற எண்ணிற்குத் தகவல் தெரிவிக்கலாம் எனவும், அத்துமீறி வாகனச் சாகசங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
