தமிழ்நாட்டில் சொத்து வாங்குபவர்களுக்குப் பட்டா மாறுதல் செய்வதை இன்னும் எளிமையாக்கும் வகையில், தானியங்கி பட்டா மாறுதல் மென்பொருளில் முக்கியத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உட்பிரிவு அல்லாத சொத்துக்களைப் பதிவு செய்தவுடன், வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் செல்லாமலேயே தானாகப் பட்டா மாறுதல் ஆகும் தற்போதைய முறையில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன. இதனைத் தீர்க்கும் பொருட்டு, முதலமைச்சர் மற்றும் வருவாய்த்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, புதிய தொழில்நுட்ப மாற்றங்களுடன் கூடிய இச்சேவை இன்னும் 15 நாட்களுக்குள் முழுமையாக நடைமுறைக்கு வரவுள்ளது.
இதற்கு முன்னிருந்த மென்பொருள் அமைப்பில், நிலத்தை விற்பனை செய்பவருடன் சேர்ந்து அவருடைய மனைவி, மகன் அல்லது மகள் போன்ற குடும்ப உறுப்பினர்களும் சாட்சியாகவோ அல்லது இணையாகவோ கையொப்பமிட்டால் தானியங்கி முறையில் பட்டா மாறாமல் சிக்கல் ஏற்பட்டது. தற்போதைய புதிய சாப்ட்வேர் மாற்றத்தின்படி, குடும்ப உறுப்பினர்கள் இணைந்து கையொப்பமிடும் நிகழ்வுகளிலும் எந்தவிதத் தடங்கலும் இன்றி தானியங்கி முறையில் பட்டா மாறுதல் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
அதேபோல், நிலத்தின் உரிமையாளர் நேரடியாக வராமல் பொது அதிகாரப் பத்திர முகவர் (Power of Attorney Holder) மூலமாகப் பத்திரப்பதிவு செய்யும் போது, விற்பனை செய்பவர் பெயரும் பட்டாதாரர் பெயரும் பொருந்தாததால் இந்தச் சேவை முடங்கிப்போனது. ஆனால், இனிவரும் நாட்களில் செல்லத்தக்க பொது அதிகார முகவர் என்ற அடிப்படையை மென்பொருள் சரிபார்த்து, பெயர்கள் மாறினாலும் தானியங்கி பட்டாவை அங்கீகரிக்கும் வகையில் சாப்ட்வேர் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சொத்து வாங்குபவருக்கு அதே கிராமத்தில் ஏற்கனவே நிலம் இருக்கிறதா என்று தேடி நேரத்தை வீணடிக்காமல், அவருக்குத் தானாகவே புதிய பட்டா எண் ஒதுக்கீடு செய்யவும் இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அரசாணை எண் 526-ன் படி கொண்டு வரப்படும் இந்த அதிநவீன சாப்ட்வேர் மாற்றத்தினால், பொதுமக்கள் இனி நிலத்தைப் பதிவு செய்த பிறகு பட்டா மாறுதலுக்காகச் சார்பதிவாளர் அலுவலகத்திற்கோ அல்லது வட்டாட்சியர் அலுவலகத்திற்கோ நேரில் சென்று அலைவதிய வேண்டிய அவசியம் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. காலவிரயத்தைக் குறைத்து, ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகத்தை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் இந்த 15 நாள் டிஜிட்டல் மாற்றம் மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்பதில் ஐயமில்லை.
