தமிழகத்தில் திமுகவின் ஆட்சிக்கால முடிவடைவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் தங்கள் ஆட்சி முடிவதற்குள் திமுகவின் வாக்குறுதிகளை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக உள்ளார். அதனால் மக்கள் அனைவரின் குறைகளை தீர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருகின்றது. இதில் மக்கள் பல சேவைகளை ஒரே இடத்தில் பெற முடியும் என அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக விடுபட்டவர்கள் மகளிர் உரிமைத் தொகைக்கு இந்த முகாம் மூலமாக விண்ணப்பித்து வருகிறார்கள்.
இப்படியான நிலையில் திமுக ஆட்சிக்காலத்தில் மட்டும் சுமார் 20 லட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாட்களுக்குள் கார்டு வழங்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
