ஒடிசா மாநிலத்தில் சிறுமியை கர்ப்பமாக்கி உயிருடன் புதைக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டத்திலுள்ள பனாஸ்பரா பகுதியில் மடம் ஒன்று உள்ளது. இந்த மடத்தில் பணியாற்றி வரும் சகோதரர்கள் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அத்துடன் தங்கள் ஆசைக்கு தொடர்ந்து இணங்க வேண்டும் என்றும் சிறுமியை மிரட்டியுள்ளனர்.
இதனால் பயந்து போன அந்த சிறுமி தனக்கு நேர்ந்த துயரத்தை வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். இதனை தனது சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த நபர்கள் சிறுமையை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனால் சிறுமி கர்ப்பமான நிலையில் ஐந்து மாத கர்ப்பிணியாக இருப்பதை அறிந்த சகோதரர்கள், தங்களுக்கு பிரச்சனை ஏற்படும் என்ற பயத்தில் சிறிதும் இரக்கமில்லாமல் கர்ப்பிணியான சிறுமியை உயிருடன் புதைக்க முயன்றனர்.
கொடூர செயலில் ஈடுபட முயன்ற அவர்களிடமிருந்து சிறுமி தப்பித்த நிலையில் நடந்தது குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றச்சரில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் தற்போது விசாரணை நடந்துவரும் நிலையில் சகோதரர்கள் இருவருக்கும் உடந்தையாக இருந்த மற்றொரு நபரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
