சர்க்கரை நோயாளிகளுக்கு தினசரி இன்சுலின் ஊசி செலுத்திக் கொள்வதில் இருக்கும் வலியில் இருந்தும், மன உளைச்சலில் இருந்தும் பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில் ஒரு புதிய மருத்துவப் புரட்சி ஏற்பட்டுள்ளது. பிரபல நோவோ நார்டிஸ்க் நிறுவனம், உலகின் முதல் ‘வாரத்திற்கு ஒருமுறை’ செலுத்தும் பேசல் இன்சுலினை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ‘அவிக்லி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய இன்சுலின், சர்க்கரை நோயாளிகள் தங்களின் ரத்த சர்க்கரை அளவை எளிதாகக் கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவுகிறது.
இந்த புதிய கண்டுபிடிப்பின் மூலம், வருடத்தில் 365 நாட்களும் தினமும் ஊசி செலுத்த வேண்டிய அவதி குறைந்து, இனி ஆண்டுக்கு வெறும் 52 முறை மட்டும் ஊசி செலுத்தினால் போதுமானது என்ற நிலை உருவாகியுள்ளது. இதனை டைப் 1 மற்றும் டைப் 2 வகை சர்க்கரை நோயாளிகள் இருவருமே பயன்படுத்தலாம். இந்தியாவில் சுமார் 10.1 கோடி மக்கள் சர்க்கரை நோயுடனும், 13.6 கோடி மக்கள் சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையிலும் வாழ்ந்து வரும் சூழலில், இந்த இன்சுலின் அறிமுகம் இந்திய மருத்துவத் துறையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
பொதுவாக, தினமும் ஊசி போடுவதில் இருக்கும் பயம் மற்றும் வலி காரணமாகவே பல நோயாளிகள் தங்களுக்குத் தேவையான இன்சுலின் சிகிச்சையை 7 முதல் 9 ஆண்டுகள் வரை தள்ளிப்போடுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆனால், இந்த ‘அவிக்லி’ இன்சுலின், நீண்ட கால ரத்த சர்க்கரை அளவைக் காட்டும் HbA1c அளவை மிகச் சிறந்த முறையில் குறைக்க உதவுகிறது என்பது மருத்துவ ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ‘ஃபிளெக்ஸ்டச் பெ சாதனம் மூலம் வாரத்திற்கு ஒருமுறை மட்டும் எளிதாகச் செலுத்தப்படும் இந்த முறை, நோயாளிகளின் மனரீதியான மற்றும் உடல்ரீதியான சுமையைக் குறைத்து, அவர்கள் சரியான நேரத்தில் சிகிச்சையைத் தொடங்க உதவும் என்று மருத்துவ வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
