பெங்களூர் – மைசூரு விரைவுச்சாலையில் கடந்த ஜூலை 5ஆம் தேதி இரவு அரங்கேறிய கொடூரமான தாக்குதல் சம்பவம் ஒட்டுமொத்தப் பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெங்களூரில் வசித்து வரும் சாகர் குமார் என்பவர், தனது மனைவி மற்றும் 10 மாத குழந்தையுடன் காரில் பயணித்தபோது, மத்தூர் அருகே இரவு 10:30 மணியளவில் 9 பேர் கொண்ட கும்பல் ஒன்று இவர்களது காரை வழிமறித்துத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு முன்னதாக இரு தரப்பு கார்களுக்கும் இடையே லேசான மோதல் ஏற்பட்டதாகவும், அதில் தன் மீது எந்தத் தவறும் இல்லாதபோதும் அந்தக் கும்பல் தங்களைக் குறிவைத்து இந்த அராஜகத்தில் ஈடுபட்டதாகவும் சாகர் குமார் தெரிவித்துள்ளார்.
காரின் கதவைத் திறந்து சாகர் குமார் மற்றும் அவரது மனைவியை அந்தக் கும்பல் இரக்கமின்றித் தாக்கியுள்ளது. அப்போது நிலைகுலைந்து போன சாகர் குமாரின் மனைவி, “தங்க நகை உட்பட எங்களிடம் உள்ள எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள், எங்களையும் எங்கள் 10 மாதக் குழந்தையையும் விட்டுவிடுங்கள்” என்று கைகூப்பிக் கெஞ்சியுள்ளார். ஆனால், அந்தப் பெண்குழந்தையின் அழுகுரலோ, தாயின் கதறலோ அந்தக் கும்பலின் மனதில் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. அவர்களின் கெஞ்சலையும் மீறி, அந்த 9 பேர் கொண்ட கும்பல் சாகர் குமாரையும் அவரது மனைவியையும் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தியுள்ளது.
இந்தக் கொடூரமான தாக்குதல் காட்சிகள், சாகர் குமாரின் காருக்குப் பின்னால் வந்த மற்றொரு காரின் ‘டேஷ் கேமராவில்’ (Dashcam) துல்லியமாகப் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இணையதளங்களில் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து, பாதிக்கப்பட்ட சாகர் குமார் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 3 பேரைக் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள மீதமுள்ள 6 பேரைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர். படுகாயமடைந்த சாகர் குமார் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சாகர் குமார், இந்தச் சம்பவம் குறித்து மிகவும் உருக்கமாகப் பேசியுள்ளார். அதிர்ஷ்டவசமாக இந்தத் தாக்குதல் கேமராவில் பதிவாகி வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும், ஆனால் நெடுஞ்சாலைகளில் வெளியில் தெரியாமல் இப்படி எத்தனையோ அராஜகங்கள் நடந்து வருவதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார். மேலும், பெங்களூர் – மைசூரு எக்ஸ்பிரஸ் சாலையில் பல இடங்களில் இன்னும் சிசிடிவி (CCTV) கேமராக்கள் பொருத்தப்படாததே இதுபோன்ற குற்றவாளிகள் தப்பிச் செல்லக் காரணமாக அமைவதாகவும், இந்தச் சம்பவத்திற்குப் பிறகாவது நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தவறு செய்த அனைவருக்கும் கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
