பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளர்களாக வேலை பார்த்து வரும் நேபாள நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவினர், ஞாயிற்றுக்கிழமை மாலை விதான் சௌதா பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது அங்கு புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது, ஒரு குழுவினர் மற்றொரு குழுவினரை மறைப்பதாகவோ அல்லது இடையூறு செய்வதாகவோ கூறி அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த சாதாரண வாய் தகராறு, சில நிமிடங்களில் பெரிய மோதலாக மாறியது.
நடுரோட்டில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் சரமாரியாக குத்தியும், சட்டையைப் பிடித்து இழுத்துத் தாக்கியும் கொடூரமாகச் சண்டையிட்டுக் கொண்டனர். சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் ஒரு முக்கிய அரசு வளாகத்தின் முன்பாக, பகல் நேரத்தில் அரங்கேறிய இந்த வன்முறைச் சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. இந்த மோதலை அங்கிருந்த சிலர் தங்கள் மொபைல் போனில் வீடியோவாக எடுக்க, அது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலானது.
சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பரவி, அப்பகுதியின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியதை அடுத்து, விதான் சௌதா காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்தனர். முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, இந்த பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்த குற்றத்திற்காக நேபாளத்தைச் சேர்ந்த சக்தி, ஈஸ்வர், திபேந்திரா உட்பட 4 இளைஞர்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் இதில் தொடர்புடைய மற்ற நபர்களையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
