நாத்தனாருக்கு 10% சொத்து, 50 கோடி வரதட்சணை… கல்யாண சந்தையில் அரங்கேறிய பகீர் சம்பவம்… வைரலாகும் சின்மயியின் ஆவேசப் பதிவு…!

By SATHISH R on ஆனி 30, 2026

Spread the love

திருமணம் என்பது இரு மனங்களும், இரு குடும்பங்களும் இணையும் புனிதமான பந்தமாகப் பார்க்கப்பட்ட காலம் போய், இன்று சில இடங்களில் அது ஒரு பக்கா பிசினஸாக மாறி வருவது பெரும் வேதனையை அளிக்கிறது. சட்டம் பலவாறு வரதட்சணையைத் தடை செய்திருந்தாலும், சமூகத்தின் சில அடுக்குகளில் பணப் பேராசை இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கிறது. சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு பெண் மருத்துவரின் குமுறல், இந்த கசப்பான உண்மையை மீண்டும் நம் முகத்தில் அறைந்து காட்டியுள்ளது.

தனக்கு வந்த வரன்களில் ஒரு குடும்பம் ₹50 கோடி வரதட்சணை கேட்டதாகவும், மற்றொரு குடும்பம் நாத்தனாருக்கு மணமகள் சொத்தில் 10 சதவீத பங்கை எழுதித் தர வேண்டும் என்று நிபந்தனை விதித்ததாகவும் அந்த பெண் மருத்துவர் பதிவிட்டிருந்தார். தொழில்நுட்பமும் நாகரிகமும் வளர்ந்துவிட்ட 2026-ஆம் ஆண்டிலும் கூட, நன்கு படித்த ஒரு பெண்ணையே பண இயந்திரமாக பார்க்கும் இத்தகைய மனப்போக்கு பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

   

இந்த விவகாரம் குறித்து பாடகி சின்மயி தனது சமூக வலைதள பக்கங்களில் மிகவும் காட்டமாக எதிர்வினையாற்றியுள்ளார். “இது திருமணம் இல்லை… அடுத்தவர் வீட்டுப் பணத்தை சட்டப்படி கொள்ளையடிக்க முடியாததால், கல்யாணம் என்ற பெயரில் கேட்கப்படும் கொள்ளை. எப்படி அடுத்தவங்க சொத்தை ஆட்டைய போடலாம் என்று குடும்பமாக உட்கார்ந்து யோசிப்பாங்க போல” என்று அவர் சாடியுள்ளார். பெண்களின் உரிமைகளுக்காகவும், சமூக அநீதிகளுக்கு எதிராகவும் தொடர்ந்து துணிச்சலுடன் குரல் கொடுத்து வரும் சின்மயியின் இந்த ஆவேசப் பதிவு தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

   

சமூக வலைதளங்களில் இந்த பதிவிற்கு ஆதரவாக பல பெண்களும் தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். இன்று வரதட்சணை என்ற வார்த்தை நேரடியாகப் பயன்படுத்தப்படாவிட்டாலும், அதற்குப் பதிலாக “செட்டில்மென்ட், கிப்ட், தொழில் தொடங்க உதவி, நாத்தனாருக்கு சொத்து” எனப் பெயர்கள் மட்டுமே மாறியிருக்கின்றனவே தவிர, அதன் பின்னுள்ள பேராசை மாறவில்லை. வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் சட்டப்படி குற்றம் என்பதை உணர்ந்து, மக்கள் மனங்களில் உண்மையான மாற்றம் ஏற்படும் போது மட்டுமே இத்தகைய திருமணக் கொள்ளைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.