மத்தியப் பிரதேச மாநிலம் பேதுல் மாவட்டத்தில் உள்ள ஜல்லார் கிராம ஊராட்சியில், உயிரிழந்த பசு ஒன்றின் உடல் குப்பை அள்ளும் வாகனத்தில் கட்டி ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பொதுமக்களின் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரமான காட்சி சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியாகி, உள்ளூர் மக்கள் மற்றும் பசு பாதுகாப்பு அமைப்புகளிடையே கடுமையான கண்டனங்களை எதிர்கொண்டு வருகிறது.
உள்ளூர் அதிகாரிகளின் கூற்றுப்படி, பரத்வாடா சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அந்தப் பசு இரண்டு நாட்களுக்கு முன்பே உயிரிழந்துள்ளது. உரிமை கோர யாரும் வராததால், அனாதையாகக் கிடந்த பசுவின் உடல் அழுகத் தொடங்கி துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயம் உருவானதால், அதனை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
https://www.instagram.com/reel/DaLUTDSzSVk/?utm_source=ig_web_button_share_sheet
அந்த நேரத்தில் உடலை எடுத்துச் செல்ல டிராக்டர் அல்லது பிற வாகனங்கள் எதுவும் கிடைக்காததால், தூய்மைப் பணியாளர்கள் பசுவின் உடலைக் கயிற்றால் கட்டி குப்பை வண்டியின் மூலம் இழுத்துச் சென்றுள்ளனர். இந்த மனிதாபிமானமற்ற செயலுக்குப் பசு பாதுகாப்பு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஊராட்சித் தரப்பில் குப்பை வண்டி ஓட்டுநருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதுடன், இதுகுறித்து முறையான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
