அதிமுக ஆட்சியின் போது நடந்த ஊழல் புகார்களைப் பட்டியலிட்டு தவெக தரப்பு மிகக் கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது. 26 இடங்களில் ரெய்டு நடந்த பிறகே எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கைகுலுக்கினார் என்றும், கே.சி.வீரமணி, விஜயபாஸ்கர் போன்ற ஊழல் வழக்குகளைச் சந்தித்து வரும் “கொள்ளை கூட்டத்திற்கு” விஜய் மீது குற்றம் சாட்ட எந்தத் தகுதியும் இல்லை என்றும் தவெக சாடியுள்ளது. ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்திப் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தவர்களால், ஒரு மாற்றத்திற்கான அரசியலை முன்னெடுக்கும் விஜயைப் பற்றிப் பேச முடியாது என அவர்கள் ஆவேசமாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும், தமிழக அரசியல் களம் இப்போது அதிமுகவை ஓரம் கட்டிவிட்டு, திமுக மற்றும் தவெக இடையேயான நேரடிப் போட்டியாக மாறிவிட்டதாகத் தவெகவினர் கூறியுள்ளனர். 22 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்த அதிமுக இன்று களத்திலேயே இல்லை என்றும், ஆத்திரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசி வருவதாகவும், அந்த சூட்டைத் தணிக்க அவர் சோடா வாங்கி குடிப்பது நல்லது என்றும் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளனர். ஏழைத் தொண்டர்களையும், உழைப்பால் உயர்ந்த மாவட்டச் செயலாளர்களையும் நம்பி விஜய் முன்னெடுக்கும் இந்த ஆட்சி மாற்றத்திற்கான அரசியல் ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டதாகத் தவெகவினர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.
