தனது தந்தையின் உடல்நிலையைக் கவனித்துக் கொள்வதற்காக 6 தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பிலிருந்து அண்ணாமலை சமீபத்தில் விலகியிருந்தார். இந்தச் சூழலில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலைக்குத் தமிழகம் முழுவதும் 24,000 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரங்களை ஒருங்கிணைக்கும் முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தேர்தல் களத்தில் பாஜகவின் இருப்பை வலுப்படுத்தவும், அடிமட்டத் தொண்டர்களை உற்சாகப்படுத்தவும் இந்த “மாஸ்டர் பிளான்” வகுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்தப் பொறுப்பு குறித்து பாஜக கட்சித் தலைமையிடமிருந்து இதுவரை எழுத்துப்பூர்வமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணாமலை தீவிர அரசியலில் இருந்து சற்று ஓய்வு எடுக்க விரும்பிய நிலையில், மாநிலத் தலைமையின் இந்த அறிவிப்பு அவர் மீண்டும் களத்திற்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், இது அண்ணாமலையை மீண்டும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. இந்தத் தெருமுனைப் பிரச்சாரங்கள் மூலம் பாஜக தனது வாக்கு வங்கியைத் தக்கவைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
