தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சையோ அல்லது தரமான பராமரிப்போ கிடைக்காததால் அடுத்தடுத்து அசம்பாவிதங்கள் அரங்கேறி வருவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் விபத்தில் காயமடைந்த நபர் பலியானதும், கோபிச்செட்டிபாளையத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்ட குழந்தை உயிரிழந்ததும், தேனி பெரியபாளையம் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் 14 வயது சிறுவன் கோமா நிலைக்குச் சென்றதும் இதற்குச் சான்றுகள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆட்சிப் பொறுப்பேற்ற போது அமைச்சர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சை பெறுவார்கள் எனப் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் அருண் ராஜ், தற்போது சமூக வலைதளங்களில் விதவிதமாக ‘ரீல்ஸ்’ பதிவிடுவதில் மட்டுமே கவனம் செலுத்துவதாக அவர் விமர்சித்துள்ளார். மாற்றம் தருவதாகக் கூறி ஆட்சியைப் பிடித்த தமிழக வெற்றிக் கழக அரசு நிர்வாகத் திறனின்றி திணறுவதாகவும், முதல்வர் விஜய்யும் அவரது அமைச்சர்களும் இன்னமும் ரீல்ஸ் மோடிலேயே உலா வருவதாகவும் அவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
விஜய் தலைமையிலான அரசு இனியாவது மக்களின் அடிப்படைத் தேவைகளையும், தீவிரப் பிரச்சினைகளையும் நேரில் கவனித்துச் செயல்பட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் நியமிக்கப்படுவதையும், தரமான மருந்துகள் தடையின்றி கிடைப்பதையும் தவெக அரசு உடனடியாக உறுதி செய்து, ஏழை எளிய மக்களின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
