சென்னை கீழ்ப்பாக்கம் தியாகப்பா தெருவில் உள்ள குப்பைத் தொட்டியில் சாக்குப்பையில் சுற்றப்பட்ட நிலையில், இறந்துபோன ஆண் குழந்தையின் உடல் மீட்கப்பட்டது. இது குறித்து கீழ்ப்பாக்கம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். தீவிர விசாரணையின் முடிவில், அங்குள்ள ஒரு தொழிலதிபர் வீட்டில் கேர்டேக்கராகப் பணியாற்றி வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த பிரியங்கா (22) என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பிரியங்கா தனது காதலன் சந்தோஷ் என்பவருடன் பழகியதில் கர்ப்பமானதும், திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதை யாரிடமும் கூறாமல் மறைத்து வந்ததும் தெரியவந்தது. கடந்த ஜூலை 27 நள்ளிரவு வேலை செய்யும் முதலாளியின் வீட்டு கழிவறையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை அழுததால் பயந்துபோன பிரியங்கா, குழந்தையின் வாய் மற்றும் மூக்கை அமுக்கவே குழந்தை மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தது.
குழந்தை இறந்ததும் செய்வதறியாது திகைத்த பிரியங்கா, தனது தோழிகளான மேரி, சிவகாமி மற்றும் மணிஷா ஆகியோரிடம் தொலைபேசியில் ஆலோசனை கேட்டுள்ளார். அவர்களின் அறிவுறுத்தலின்படி, ஜூலை 28 அதிகாலை குழந்தை உடலை பிளாஸ்டிக் அரிசி பையில் கட்டி குப்பைத் தொட்டியில் வீசியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து பிரியங்காவை கைது செய்த போலீசார், அவருக்கு தவறான ஆலோசனை வழங்கிய தோழிகள் மற்றும் அவரை வேலையில் சேர்த்த ஏஜென்சி நபர் ஆகியோரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
