தமிழ் சினிமாவில் 90 களில் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசை ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருந்த போது தனி வழியில் சென்றவர்தான் தேனிசைத் தென்றல் தேவா. விஜய், அஜித், சூர்யா, ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களொடும், பாலச்சந்தர், பாரதிராஜா, வசந்த் என முன்னணி இயக்குனர்களோடும் பணியாற்றி பல ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார்.
சமீபகாலமாக படங்களுக்கு இசையமைக்காமல் இருந்த தேவா இப்போது மீண்டும் அறம் கோபி இயக்கும் ஒரு படத்துக்கு இசையமைக்க கமிட்டாகியுள்ளார். தேவாவின் சினிமா வாழ்க்கையில் அவர் ரஜினிக்காக இசையமைத்த அண்ணாமலை மற்றும் பாட்ஷா ஆகிய இரு படங்களும் மைல்கல்லாக அமைந்தன. அதுவரை ரஜினி – இளையராஜா காம்பினேஷன் வெற்றிக்கொடி நாட்டி வந்த நிலையில் தேவா ரஜினி படங்களுக்கு தன் இசையால் புத்துயிர் ஊட்டினார்.
2000 களுக்குப் பிறகு இசையின் வடிவம் மாறியதாலும் புது இசையமைப்பாளர்கள் அறிமுகத்தாலும் தேவா மெல்ல மெல்ல வாய்ப்புகளை இழந்து ஓரம் கட்டப்பட்டார். பல ஆண்டுகள் காணாமல் போயிருந்த தேவா தற்போது சில படங்களுக்கு மீண்டும் இசையமைக்க ஆரம்பித்துள்ளார். அதில் அறம் இயக்குனர் கோபி நயினார் இயக்கும் படமும் ஒன்று.

இந்நிலையில் சமீபகாலமாக அவர் அதிகமாக நேர்காணல்கள் கொடுத்து தன்னைப் பற்றிய விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அப்படி ஒரு நேர்காணலில் தன்னுடைய மகனும் இசையமைப்பாளருமான ஸ்ரீகாந்த் தேவா சினிமாவில் வெற்றிகரமாக தொடர முடியாமல் போனது குறித்து மனம் குமைந்து வருத்தப்பட்டு பேசியுள்ளார்.
அதில் “ஸ்ரீகாந்தை நினைத்து நான் அடிக்கடி வருத்தப்படுவேன். அவன் அருமையான மெலடிகளை போடுகிறார். ஆனால் அந்த பாடல்கள் ரசிகர்களை சென்று சேர்வதில்லை. படம் ஓடாததால் பாட்டு சென்று சேர்வதில்லை. எதனால் என்று வருத்தப்படுவேன். ஆனால் சில பேர் வந்து ‘சார் ஸ்ரீகாந்த் ரொம்ப தன்மையா நடந்துக்குவார் சார். இப்படி ஒரு மகன் கிடைக்க நீங்க கொடுத்து வச்சிருக்கணும் ’ என்று சொல்வார்கள். அந்த வார்த்தைதான் பெரிது. சங்கீதத்தை விட இங்கிதம் முக்கியம். சங்கீதத்தைக் கற்றுக் கொள்ளலாம். ஆனால் இங்கீதத்தைக் கற்றுக் கொள்ள முடியாது” எனப் பேசியுள்ளார்.
