தமிழ் சினிமாவில் 80 களின் இறுதியில் நகைச்சுவை நடிகையாக அறிமுகமானார் ஷகிலா. கவுண்டமணி செந்தில் நகைச்சுவை காட்சிகளில் பல படங்களில் அவர் நடித்து வந்தார். இதற்கிடையில் அவர் திடீரென மலையாள சினிமாவுக்குள் புகுந்தார்.
மலையாள சினிமாவில் நடித்த அவர் பி கிரேட் படங்களில் நடிக்க தொடங்கினார். அவர் படங்கள் தொடர்ந்து ஹிட்டாக மலையாள பி கிரேட் சினிமாக்களின் நிரந்தர ஹீரோயினாக மாறினார். அவரின் படங்கள் 90 களில் சக்கை போடு போட்டு கல்லா கட்டின. மொழி தாண்டி தமிழ் நாட்டிலும் அவரது படங்கள் வெளியாகின.
ஒரு கட்டத்தில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களான மம்மூட்டி, மோகன் லால் படங்களுக்கே ஷகிலாவின் படங்கள் கடும் போட்டியாக அமைந்துள்ளன. இதனால் அவர்கள் எல்லாம் திட்டம் போட்டே ஷகீலாவை மலையாள சினிமாவை விட்டே விரட்டி விட்டதாக ஒரு தகவல் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் ஷகிலா இதுவரை அதுபற்றி எதுவும் வாய்திறக்கவில்லை.
மலையாள சினிமாவில் இருந்து வெளியேறிய ஷகீலா தொடர்ந்து தமிழ் படங்களில் மீண்டும் நகைச்சுவை வேடங்களில் நடிக்க தொடங்கினார். விஜய்யின் அழகிய தமிழ் மகன் மற்றும் பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகிய படங்களில் நடித்த அவர் தொடர்ந்து சந்தானத்தின் பல படங்களில் நடிக்க தொடங்கினார். பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவரின் மறுமுகத்தைப் பார்த்த ரசிகர்கள் அவரை வெகுவாக ரசிக்க ஆரம்பித்தனர். அதன் பின்னர் அவர் மீதான இமேஜ் மாறியது.
இந்நிலையில் ஒரு மேடையில் ஷகீலாவோடு கலந்துகொண்டு பேசிய நடிகர் இளவரசு அவரது வெளிப்படைத் தன்மையை வெகுவாகப் பாராட்டியுள்ளார். அதில் “நானும் ஷகீலாவும் ஒரு ஷூட்டிங்குக்காக ஐதராபாத் வரை ஒன்றாக ரயிலில் பயணித்தோம். அப்போது அவர் தன்னைப் பற்றி வெளிப்படையாக எல்லா விஷயங்களையும் பேசினார். அவருடன் பேசியது எனக்கு என் அம்மா, என் மனைவி மற்றும் என் மகள் ஆகியோரைப் பற்றி இன்னும் புரிந்துகொள்ள உதவியாக இருந்தது. ஷகீலா மாதிரி யாரும் பேச மாட்டாங்க. ஏனென்றால் எல்லோருக்கும் ஒரு பிம்பம் இருக்கு. ஆனா ஷகீலா அதப் பத்தியெல்லாம் கவலைப் படாம ‘இதுதான் நான்’ என வெளிப்படையாகப் பேசுபவர். மற்றவர்கள் தன்னைப் பற்றி தவறாக நினைப்பார்களே என்றெல்லாம் அவர் பயப்பட மாட்டார். ஷகீலா எனக்கு அப்படிப்பட்ட ஒரு தோழி” எனக் கூறியுள்ளார்.