தமிழ் சினிமாவில் 80களில் இறுதியில் இசைஞானி இளையராஜாவின் ஆதிக்கம் தான் நிறைந்திருந்தது. அந்த சூழலில் தான் இசை புயல் ஏ ஆர் ரகுமான் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அதே காலகட்டத்தில் கானா பாடல்களின் தந்தையாக விளங்கும் தேவாவும் அறிமுகமானார். இந்த இரண்டு பெரிய ஜாம்பவான்களுக்கு மத்தியில் தானும் ஒரு சிறந்த இசையமைப்பாளராக மாற வேண்டும் என்று எண்ணி அதுவரை பிளாட்பார்ம் பாடல்கள் என்று அழைக்கப்பட்டு வந்த பாடல்களுக்கு கானா பாடல் என்று பெயரிட்டு தன்னுடைய திரைப்படங்களில் அதை பெரிய அளவில் பயன்படுத்தியது மட்டுமல்லாமல் அந்த விஷயத்தில் மிகப்பெரிய சாதனை படைத்தவராக தேவா மாறினார்.
கடந்த 1989 ஆம் ஆண்டு தமிழில் பிரபல நடிகர் ராமராஜன் நடிப்பில் வெளியான மனசுக்கேத்த மகாராசா திரைப்படம் மூலம் தான் தேவா இசை அமைப்பாளராக அறிமுகமானார். தமிழில் தொடர்ச்சியாக நல்ல பல படங்களை கொடுத்து வந்த தேவாவிற்கு கடந்த 1990 ஆம் ஆண்டு பிரசாந்த் நடிப்பில் வெளியான வைகாசி பொறந்தாச்சு என்ற திரைப்படம் தான் முதன் முதலில் தமிழக அரசு வழங்கும் மாநில விருதை பெற்று தந்தது. அன்று தொடங்கி இன்று வரை சினிமாவில் முன்னணியில் உள்ளார். இந்த நிலையில் தேவா சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது குடும்பம் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அதில், நான் சின்ன வயசுல இருக்கும்போது படிப்பையும் பாதையில விட்டுட்டேன் அதனால நாம மேடையில் பேசும்போது நல்லா ஆங்கிலம் பேச வேண்டும் என்பதற்காக ஒரு நோட்டு எடுத்துக்கிட்டு இங்கிலீஷ் கிளாஸ் போய் கத்துக்கிட்டேன். அத கூட என் மனைவி கிண்டல் பண்ணுவாங்க. நீங்க இங்கிலீஷ் பேசுறது கூட தமிழ் பேசுற மாதிரி தான் இருக்குது எனக்கூறி என்ன கிண்டல் பண்ணாங்க. நமக்கும் இங்கிலீஷ் தெரியும் என்று பெருமையா இருந்தப்ப என்னோட பேர பசங்க நான் பேசுறத தவறு என்று சுட்டிக் காட்டுவாங்க. நாம சினிமால பிசியா இருக்க காலத்துல குடும்பத்தை கண்டுக்கவே மாட்டோம் ஆனால் ஒரு ஓய்வுன்னு வந்ததுக்கு அப்புறம் நம்மளோட நண்பர்கள் நம்ம குடும்பத்துல இருக்கவங்க தான்.
என் மனைவியை நான் திருமணம் செய்து கொண்டது காதல் திருமணம் என்று சொல்ல முடியாது. அவங்க ஒரு கிராமத்துல இருந்து சென்னைக்கு அவங்க சொந்தக்காரங்க வீட்டுக்கு வந்து இருந்தாங்க. அப்போ அந்தப் பக்கம் போறப்ப வரப்ப நான் அவங்கள பார்ப்பேன். ஒரு டைம் என்னுடைய நண்பர் ஒருத்தர் காதல் பாட்டு ஒன்றை கிட்டாரில் வாசிக்கும் போது அந்த பொண்ணு நினைச்சு நான் அழுதுட்டேன். பிறகு எங்க வீட்டில் எல்லாம் பேசி தான் கல்யாணம் பண்ணி வச்சாங்க.
இருந்தாலும் அது ஒரு காதல் என்று என்னால் சொல்ல முடியவில்லை. திருமணத்துக்கு அப்புறம் இத்தனை வருஷம் ஆச்சு என்னோட மனைவி ஒரு நாள் கூட ரெக்கார்டிங் வந்தது கிடையாது. வீட்டுக்கு முன்னாடியே ஸ்டூடியோ வச்சு கூட அவங்க வந்து எட்டி கூட பாக்கல. ஒரு படத்தின் பூஜை எப்படி இருக்கும் ப்ரொடக்ஷன் எப்படி இருக்கும் என்பது கூட அவங்களுக்கு தெரியாது. இன்னும் சொல்லப்போனால் சினிமா பத்தி அவங்களுக்கு ஒண்ணுமே தெரியாது. இருந்தாலும் நான் பாடுற பாட்டுல எங்கேயாவது ஏதாவது தப்பு இருந்தா கரெக்டா கண்டுபிடிச்சு சொல்லுவாங்க என்று தனது குடும்பம் பற்றி தேவா பேசியுள்ளார்.