திருநெல்வேலி டவுன் சுந்தரர் தெருவை சேர்ந்த வெங்கடேஷ் என்ற ஆனந்த் (19). வாட்டர் கேன் போடும் தொழில் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு நண்பர்கள் 4 பேருடன் டீ குடிப்பதற்காக நெல்லை ரயில் நிலையம் அருகில் இருந்த டீக்கடைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். டீ குடித்துக் கொண்டிருக்கும் போது சில மர்ம நபர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது . அவர்கள் மறைத்து வைத்திருந்த அருவாளை எடுத்து வெங்கடேஷ் மற்றும் நண்பர்களையும் விரட்டி விரட்டி தாக்கியுள்ளனர். வெங்கடேஷுக்கு சரமாரியாக அரிவாள்வெட்டு விழுந்ததால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைப் பார்த்த அதிர்ந்து போன நண்பர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வெங்கடேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அருகில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து வெங்கடேசனின் நண்பர்களிடம் விசாரித்த போது தான் தெரியவந்தது பல திடுக்கிடும் தகவல்கள். கடந்த 2023 ஆம் ஆண்டில் சக்தி என்ற நபரை அருவாளால் வெட்டிய சம்பவம் தொடர்பாக வெங்கடேஷ் மீது ஏற்கனவே வழக்கு ஒன்று உள்ளதாக தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, இந்த கொலைக்கு காரணம் என்ன? சக்திவேல் கொலைக்கு பழி வாங்குவதற்காக வா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். நண்பர்களுடன் டீ குடிக்கப் போன இளைஞரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
