தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ள நிலையில் கட்சி நிர்வாகிகள் பலரும் இபிஎஸ் மீது அதிருப்தியில் உள்ளனர். அதன் வெளிப்பாடாக நேற்று செங்கோட்டையன் இபிஸ்க்கு எதிராக திரும்பி அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என பத்து நாட்கள் கெடு விதித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இபிஎஸ் இன்று ஆலோசனை நடத்தி செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கி உள்ளார். இதனால் அதிமுகவில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் திமுகவை விமர்சிப்பதை விட்டுவிட்டு பல அணிகளாக சிதறிக்கிடக்கும் அதிமுகவை இபிஎஸ் காப்பாற்ற வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் விவகாரத்தை குறிப்பிட்டு பேசிய உதயநிதி, அதிமுகவில் புதிய அணி உருவாகி இருப்பதாக கூறினார். மேலும் இரண்டு அதிமுக தொண்டர்கள் சந்தித்துக்கொண்டால், அதில் யார் எந்த அணியை சேர்ந்தவர் என்றுதான் பேசிக் கொள்கிறார்கள் எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
