கன்னியாகுமரி மாவட்டம் கல்லுகூட்டம் அருகே உள்ள நெடுந்தாரவிளை கிராமத்தை சேர்ந்த ராஜா (58) என்ற கூலித் தொழிலாளிக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் இருவருக்குமே திருமணம் ஆகிவிட்டது. இதனால் தன் மனைவியுடன் அதே பகுதியில் உள்ள வீட்டில் தனது மூத்த மகள் மற்றும் மருமகன் ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு வீட்டில் ராஜா திடீரென்று உயிரிழந்த நிலையில் தகவல் அறிந்த இளைய மகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில் தன்னுடைய தந்தை ராஜா வீட்டில் தனியாக இருந்தபோது மாடி படிக்கட்டில் ஏறியதில் தவறி விழுந்து காயமடைந்ததாகவும் பக்கத்து வீட்டை சேர்ந்த நபர் கொடுத்த தகவலின் படி அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மீண்டும் வீடு திரும்பிய நிலையில் குடிக்க தண்ணீர் கேட்டவர் தண்ணீர் குடிக்கும் போது பெருமூச்சு விட்டு உயிரிழந்து விட்டதாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராஜாவின் சடலத்தை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். பிரேத பரிசோதனை அறிக்கையில் ராஜா கடுமையாக தாக்கப்பட்டு இருப்பது உயிரிழப்புக்கு காரணம் என தெரிய வந்ததால் போலீசார் ராஜாவின் மூத்த மகளின் கணவரான சசியை பிடித்து விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் வெளிவந்தது.
மது போதைக்கு அடிமையான ராஜா மருமகன் சசியின் உழைப்பில் வாழ்ந்து வந்த போதிலும் சசியிடமும் குடும்பத்தினரிடமும் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று போதையில் வந்த ராஜா சசியை குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட விடாமல் மற்றும் மனைவி சமைத்த கறி விருந்தை கூட சாப்பிட விடாமல் தன்னிடம் தகராறு செய்ததாகவும் தொடர்ந்து அடுத்த நாள் போதையில் இருந்த ராஜா சனிக்கிழமை இரவும் தன்னிடம் வம்பு இழுத்து தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரம் அடைந்த தான் கட்டையால் மாமனாரை தாக்கியதாகவும் சசி தெரிவித்து.
தாக்குதலில் தலை மற்றும் உடலில் காயமடைந்த ராஜா மயங்கி சரிந்ததால் உயிரிழந்து விட்டதாக நினைத்தேன் வீட்டிலேயே போட்டு பூட்டிவிட்டு குடும்பத்துடன் தப்பி சென்று விட்டார். மாமனாரை கட்டையால் அடித்துக் கொலை செய்துவிட்டு மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து விட்டதாக நாடகமாடிய வெல்டிங் தொழிலாளி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
