தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி இந்த முறை 40 தொகுதிகள் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் 25 இடங்களில் மட்டுமே போட்டியிட்ட காங்கிரஸ் தற்போது தன்னுடைய எண்ணிக்கையை உயர்த்தி திமுகவிடம் பேச்சு வார்த்தைகள் ஈடுபட்டு வருவது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்று பேசி வருவது திமுக தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் ராகுல் காந்தி மற்றும் ஸ்டாலின் இடையேயான சுமூகமான உறவு இந்த விரிசலை சரி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனிடையே தமிழக காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்தாலும் அது தமிழக வெற்றிக்கழகம் பக்கம் சாயும் என்ற பேச்சு தொடர்ந்து வலுத்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் விஜயுடன் கூட்டணி அமைத்தால் ப. சிதம்பரம் தனிக்கட்சி தொடங்கி திமுகவுடன் கூட்டணி சேருவார் என நாளிதழ் செய்தியை மேற்கோள் காட்டி அண்ணாமலை பேசியுள்ளார். இன்றைய சூழலில் தமிழக காங்கிரஸின் கருத்தும் ராகுல் காந்தியின் கருத்தும் வெவ்வேறாக இருப்பதாகவும் அண்ணாமலை சாடியுள்ளார். இதனால் தமிழக காங்கிரஸில் புதிய கலவரம் வெடிக்கும் என தெரிகிறது.
