கன்னியாகுமரியில் இரையுமன் துறை பகுதியை சேர்ந்த சீனு என்பவருக்கு பிரபுசா (23) என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். இவர்களின் வீட்டின் அருகே ஹோட்டல் நடத்தி வந்தவர் தான் சதாம் உசைன் (32). மனைவி மற்றும் குழந்தைகளைப் பிரிந்து இவர் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் பிரபுஷாவுக்கும் சதாம் உசைனுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த சீனு தன் மனைவியை பிரிந்து சென்றார். கூடவே தன்னுடைய முதல் குழந்தையையும் அவர் அழைத்துச் சென்று விட்டார். இளைய மகனான பிறந்து 15 நாட்களே ஆன குழந்தை பிரபுஷாவிடம் இருந்தது. இதனிடையே கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பரில் மயிலாடியில் உள்ள கோழிப் பண்ணையில் இருவரும் வேலைக்கு சேர்ந்தனர்.
அப்போது தாங்கள் கணவன் மனைவி என்று கூறி அங்கேயே இரண்டு நாட்கள் தங்கி உள்ளன. தங்கி இருந்த அறையில் சதாம் உசைன் மற்றும் பிரபுசா இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். ஆனால் எதுவும் அறியாத குழந்தை பசியால் அழுதுள்ளது. உல்லாசத்திற்கு இடையூறாக இருந்ததால் குழந்தை மீது சதாம் உசைனுக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தை என்றும் பார்க்காமல் கம்பால் பலமுறை தாக்கியுள்ளார்.
மேலும் குழந்தையை தூங்க வைப்பதற்காக இருவரும் மதுபானம் கொடுத்துள்ளனர். பிறகு சிகரெட் நெருப்பால் குழந்தைக்கு பத்து இடங்களில் சூடு வைத்தது மட்டுமல்லாமல் உச்சபட்ச கொடுமையாக குழந்தையை சுடு வெந்நீரில் முக்கி எடுத்துள்ளனர். இப்படி கொடுமையின் உச்சத்தில் இருந்த குழந்தை எப்போதும் அழுது கொண்டே இருந்துள்ளது. இதனால் கோபமடைந்த சதாம் உசைன் குழந்தையை தூக்கி தரையில் வீசி உள்ளார். இதனால் குழந்தைக்கு விலா எலும்பு முறிந்துள்ளது. இந்த கோர சம்பவம் குழந்தையின் தாய் கண் முன்னே நடந்துள்ளது இருந்தாலும் அவர் கண்டு கொள்ளாமல் அதற்கு உடந்தையாக இருந்துள்ளார்.
குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது. குழந்தை சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்ததும் கள்ளக்காதல் ஜோடி இருவரும் போலீசில் சிக்கிக்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி இருவரையும் சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். பிறந்து 15 மாத குழந்தையை மதுபானம் குடிக்க வைத்தும் சிகரெட் நெருப்பால் சுட்டும் சித்திரவதை செய்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
