தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருக்கும் கட்சி நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து விலகி வருகின்றன. அதேசமயம் சமீபத்தில் செங்கோட்டையன் அதிமுகவை மீண்டும் ஒன்று இணைக்க வேண்டும் என்று கூறி இபிஎஸ்-க்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்த நிலையில் அவரை கட்சியிலிருந்து ஒட்டுமொத்தமாக நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசி இருந்தார். அதேசமயம் செங்கோட்டையனின் அடுத்த கட்ட நகர்வு என்ன என்பது தமிழக அரசியலில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது உள்ள அரசியல் சூழலில் யாரையும் நான் சந்திக்க வாய்ப்பில்லை என்று சற்று முன் செங்கோட்டையன் தனது முடிவை திட்டவட்டமாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். நூறு ஆண்டுகள் அதிமுக நிலைக்க வேண்டும் என்றால் ஜெயலலிதாவின் கனவு நிறைவேற வேண்டும். அதற்காக அதிமுக வலிமை பெற வேண்டும், அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
