குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள அஞ்சார் பகுதியில், 14 வயது சிறுமி தனது சொந்த பெற்றோராலேயே கொடூரமான சித்திரவதைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிறுமி தனது ஆண் நண்பர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியதை அவரது தாய் பார்த்துள்ளார். இதுகுறித்து தந்தையிடம் அவர் கூறியதையடுத்து, ஆத்திரமடைந்த தந்தை சிறுமியின் செல்போனை உடைத்ததோடு, அவரை கடுமையாகத் தாக்கி அறைக்குள் பூட்டி வைத்துள்ளார். பல மணி நேரம் உணவோ, தண்ணீரோ வழங்காமல் பட்டினி போட்டது மட்டுமின்றி, தந்தை அந்தச் சிறுமியைப் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்தக் கொடூரங்கள் நடக்கும்போது, தடுக்க வேண்டிய தாயும் அதற்கு உடந்தையாக இருந்ததோடு, சிறுமியின் நிர்வாணப் புகைப்படங்களை செல்போனில் எடுத்ததாகப் பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நரக வேதனையிலிருந்து தப்பிக்க நினைத்த சிறுமி, தனது அத்தை வீட்டுக்குத் தப்பிச் சென்று நடந்த விபரீதங்களைக் கூறியுள்ளார். ஆனால் அங்கு வந்த பெற்றோர்கள், சிறுமியை மீண்டும் வலுக்கட்டாயமாக வீட்டிற்கு அழைத்து வந்து அடைத்து வைத்துள்ளனர். இறுதியில் எப்படியோ தைரியத்தை வரவழைத்துக் கொண்ட அந்தச் சிறுமி, அவசர உதவி எண்ணான 112-ஐத் தொடர்புகொண்டு காவல்துறையினரிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகளைப் புகாராகத் தெரிவித்தார். உடனடியாக விரைந்து வந்த போலீசார், சிறுமியை மீட்டுப் பாதுகாப்பான இடத்தில் ஒப்படைத்தனர். பெற்ற மகளைக் கொடூரமாகச் சீரழித்த தந்தை மற்றும் அதற்கு முழுமையாக உடந்தையாக இருந்த தாய் ஆகிய இருவர் மீதும் போக்சோ மற்றும் இந்திய நியாய சன்ஹிதா உள்ளிட்ட கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளனர்.
