தெலுங்கானா மாநிலத்தில் 9-ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது மகள் தொடர்ந்து செல்போன் பயன்படுத்தியதால் ஆத்திரமடைந்த பெற்ற தாயே அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, தற்கொலை என நாடகமாடிய கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ரங்காரெட்டி மாவட்டம் கொத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனுமன் கோவில் காலனியைச் சேர்ந்த முய்யாடி ராஜு – விஜயலட்சுமி (34) தம்பதியினரின் 14 வயது மகள் சுவர்ணா, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். சிறுமி சுவர்ணா எப்போதும் செல்போனைப் பயன்படுத்திக் கொண்டிருந்ததால் தாய் விஜயலட்சுமிக்கும் மகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த அக்டோபர் 27 அன்று இதுதொடர்பாக மீண்டும் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் உருவாகியுள்ளது.
இதில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற தாய் விஜயலட்சுமி, தனது சொந்த மகளின் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர் இச்சம்பவத்தை மறைக்க மகளின் உடலைச் சேலையால் தூக்கில் தொங்கவிட்டுத் தற்கொலை போல நாடகமாடியுள்ளார். எனினும், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சிறுமி கழுத்து நெரிக்கப்பட்டே கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தாய் விஜயலட்சுமி குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரைக் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.
