கரூர் சோகம்…. “என் சாவுக்கு இவர்தான் காரணம்”…. கணவருக்கு கடிதம் எழுதிவிட்டு மகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை….!

By Nanthini on கார்த்திகை 2, 2026

Spread the love

கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள கருப்பூர் பகுதியைச் சேர்ந்த நாடகக் கலைஞரான மகேஷ் என்பவருக்கும் அவரது மனைவி ரேகாவுக்கும் (36) இடையே குடும்பப் பிரச்சனை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. மகேஷிற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் பேரில், ரேகா தனது கணவரிடம் நியாயம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகேஷ், மனைவி மற்றும் 7 வயது மகள் ரீனுஸ்ரீயை தவிக்கவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். கணவரின் செயலால் கடுமையான மனவேதனையடைந்த ரேகா, தனது பிஞ்சு மகளுடன் வாழ விருப்பமின்றி விபரீத முடிவெடுக்கத் துணிந்துள்ளார்.

நேற்றிரவு, மனமுடைந்த நிலையில் இருந்த ரேகா, தனது மகள் ரீனுஸ்ரீயை அழைத்துக் கொண்டு வீட்டின் அருகே இருந்த கிணற்றில் திடீரென குதித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த வெள்ளியணை காவல்துறையினர், இருவரின் உடல்களையும் மீட்டு வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய் மற்றும் மகள் உயிரிழந்த இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.