1991 ஆம் ஆண்டு வெளியாகி கவனம் வெள்ளி விழா கண்ட படம்தான் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா இயக்கிய ‘என் ராசாவின் மனசிலே’. உதவி இயக்குனராக இருந்த போது 12 ஆண்டுகளுக்கு முன்னர் தான் எழுதிய ஒரு கதையை அவர் அப்போது தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் இருந்த ராஜ்கிரணிடம் கூறியுள்ளார். அந்த கதை ராஜ்கிரணுக்கு பிடித்துவிடவும், அதில் இருந்த மாயாண்டி என்ற முரடனின் கதாபாத்திரம் தனக்கு பொருத்தமாக இருக்கும் என முடிவு செய்து தானே நடிக்கவும் முடிவு செய்துள்ளார்.
இந்த படத்தில் முதலில் ராமராஜனைதான் நடிக்க வைக்க வேண்டும் என முடிவு செய்துள்ளனர். ஆனால் அவர் நெகட்டிவ் தன்மையுள்ள கதாபாத்திரம் என்பதால் யோசித்துள்ளார். அதனால் ஒரு கட்டத்தில் ராஜ்கிரண் நானே இந்த படத்தில் நடிக்கிறேன் என்று சொல்லி இறங்கியுள்ளார். படம் வெளியாகி அவரை முன்னணி கதாநாயகன் ஆக்கியது. ஒரு கட்டத்தில் ரஜினி, கமலுக்கு இணையான சம்பளத்தை அவர் பெற்றார்.
ஆனால் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்குள்ளாகவே ஹீரோவாக அவரின் மார்க்கெட் விழுந்தது. அதன் பின்னர் குணச்சித்திர நடிகராக நந்தா திரைப்படத்தில் ரி எண்ட்ரி கொடுத்தார். அந்த படத்தில் அவரின் நடிப்பு பாராட்டுகளைப் பெற தொடர்ந்து இப்போது வரை குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார்.
ராஜ்கிரணின் முதல் படமான ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் அவர் திருவிழாவில் எலும்புக் கடிக்கும் காட்சி ஒன்று இடம்பெற்றிருக்கும். அவர் வெறிகொண்டு அதை சாப்பிடும் காட்சி ரசிகர்கள் மத்தியில் வெகு பிரபலம். அந்த காட்சி ஹிட் ஆனதால் அதன் பிறகு அவர் நடிக்கும் படங்களில் எல்லாம் அதே போல காட்சிகளை வைக்க ஆரம்பித்தார்கள்.
அவர் நடித்த அரண்மனைக் கிளி, பாசமுள்ள பாண்டியரே என தொடர்ந்த இந்த செண்ட்டிமெண்ட் முனி படம் வரை தொடர்ந்தது. அவர் அசைவ உணவு சாப்பிடுவது போன்ற காட்சி வைக்கப்பட்டது. இதை வைத்தே கிரீடம் படத்தில் விவேக் ராஜ்கிரணைக் கிண்டல் செய்வது போன்ற ஒரு காட்சியை உருவாக்கியிருப்பார்.