தமிழ் சினிமாவில் 80 களில் தொடர்ந்து பல ஹிட் படங்களைக் கொடுத்து வெள்ளி விழா நாயகனாக வலம் வந்தவர் மோகன். பல படங்களில் பாடகராக இவர் தோன்றி நடித்ததால் இவரை ரசிகர்கள் செல்லமாக மைக் மோகன் என்றே அழைத்து வந்தனர்.
கர்நாடகாவைப் பூர்விகமாகக் கொண்ட மோகனை பாலு மகேந்திரா தன்னுடைய கோகிலா திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தினார். அந்த படம் தமிழ் நாட்டிலும் நன்றாக ஓடிய நிலையில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார்.
அவரின் மூடுபனி, பயணங்கள் முடிவதில்லை, கிளிஞ்சல்கள், நூறாவது நாள், மௌன ராகம் உள்ளிட்ட ஏராளமான படங்கள் வெள்ளிவிழாக் கண்டன. அதனால் ரஜினி, கமலுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகராக விளங்கினார். ஆனால் 90 களுக்குப் பிறகு அவருக்கான மார்க்கெட் குறைய ஆரம்பித்தது. அதனால் 90 களில் இருந்து அவர் அதிகமாக படங்களில் நடிக்கவே இல்லை. இப்போது ஹரா மற்றும் தி கோட் ஆகிய படங்களின் மூலம் ரி எண்ட்ரி கொடுக்கிறார்.
சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் மணிரத்னம் இயக்கிய அஞ்சலி படத்தில் தான் ஏன் நடிக்கவில்லை என்பது குறித்து பேசியுள்ளார். அதில் “பாதிக்கப்பட்ட குழந்தையான அஞ்சலி, தனியறையில் தூங்குவது போல வரும் காட்சிகள் எனக்கு உடன்பாடாக இல்லை. அப்பா அம்மா உடனிருக்க வேண்டாமா ? ஒரு அப்பாவாக என்னால் அந்த காட்சிகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் நான் அந்த படத்தில் நடிக்கவில்லை” எனக் கூறியுள்ளார். மோகனின் இந்த கருத்து சரியானதுதான் என்று சமூகவலைதளங்களில் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
முதலில் அஞ்சலி படத்தை மௌனராகம் படத்தின் தொடர்ச்சியாகதான் எடுக்க விரும்பினாராம் மணிரத்னம். மௌனராகம் படத்தின் இறுதியில் சேரும் மோகன் – ரேவதி தம்பதிகளின் குழந்தையாகதான் அஞ்சலி கதாபாத்திரத்தை உருவாக்கினாராம். ஆனால் மோகன் விலகியதால் அந்த கதாபாத்திரத்தில் ரகுவரன் நடிக்க ஒப்பந்தமானார்.
