திடீர் ஜோதிடக் கணிப்பு… “அரண்மனை சாபம் விஜய் ஆட்சியைப் பறிக்குமா?”…. புதுக்கோட்டை சம்பவத்தால் திடுக்கிட்ட திராவிட அரசியல்….!

By Nanthini on கார்த்திகை 3, 2026

Spread the love

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் காலடி வைக்கும் அதிகார மையம் எதுவாக இருந்தாலும், அங்கு நிலைத்தன்மை என்பது கேள்விக்குறியே என்ற வரலாற்று உண்மையைச் சுட்டிக்காட்டி திமுக முன்னாள் எம்பி எம்.எம்.அப்துல்லா விடுத்துள்ள பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. நடிகர் விஜய்யின் புதுக்கோட்டை வருகையை முன்னிட்டு அரசு விழா நடைபெறும் இடம் இரவோடு இரவாக ஆயுதப்படை மைதானத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது. ஜோதிடர்களின் ஆலோசனையின் பேரில், “ஒரு நாட்டின் முதல்வராகிய விஜய், ராஜாவைப் போல ஆட்சியர் அலுவலகத்திலிருந்துதான் நலத்திட்டங்களை வழங்க வேண்டும்” என்பதற்காகவே இந்த மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவலை மையமாக வைத்து அப்துல்லா தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தின் சுவாரசியமான வரலாற்றை நினைவுகூர்ந்துள்ள அவர், இந்த இடம் வெறும் அரசு அலுவலகம் மட்டுமல்ல, புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆண்ட மன்னர்களின் ‘புது அரண்மனை’ என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். தொண்டைமான் வம்சத்தின் கடைசி மன்னரான மகாராஜா ஸ்ரீ பிரகதாம்பாள் தாஸ் ராஜா ராஜகோபால தொண்டைமான் பகதூர், சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இந்த பிரம்மாண்ட அரண்மனைக்குக் குடியேறிய சில ஆண்டுகளிலேயே, இந்தியா சுதந்திரம் அடைந்ததை அடுத்து தனது சமஸ்தானத்தை மனமுவந்து இந்திய ஒன்றியத்துடன் இணைத்தார். இதன்மூலம், பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்த தொண்டைமான் பரம்பரையின் அரசாட்சி இந்த அரண்மனைக்கு வந்த சில ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்த வரலாற்றுச் சம்பவத்தை அவர் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.

   

சுதந்திரத்திற்குப் பிறகும் மன்னரின் சொந்தக் கட்டுப்பாட்டில் இருந்த இந்த அரண்மனை, 1971-இல் இந்திரா காந்தி அவர்களால் மன்னர் மானியம் ஒழிக்கப்பட்டதாலும், கடும் சொத்து வரிகள் விதிக்கப்பட்டதாலும் மன்னரால் பராமரிக்க முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டது. பின்னர் 1974-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி அவர்களால் புதுக்கோட்டை தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டபோது, மன்னர் ராஜகோபால தொண்டைமான் கலைஞரைத் தொடர்புகொண்டு, “புதிய மாவட்டத்தின் ஆட்சியர்தான் இனி இந்த பகுதிக்கு அரசர் போன்றவர்; எனவே எனது அரண்மனையையே ஆட்சியர் அலுவலகமாக மாற்றிக் கொள்ளுங்கள்” என்ற வேண்டுகோளை முன்வைத்தார். அதன்படியே அரசருக்குரிய தொகையை வழங்கி, அந்த அரண்மனையை கருணாநிதி அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக மாற்றினார்.

   

அரண்மனை ஆட்சியர் அலுவலகமாக மாறிய பிறகு அங்கு பணியாற்ற வந்த எந்தவொரு ஆட்சியரும் நீண்ட காலம் நிலைத்து இருந்ததில்லை என்ற நடைமுறை உண்மையை அப்துல்லா தனது பதிவில் விவரித்துள்ளார். அங்கு பொறுப்பேற்கும் ஆட்சியாளர்கள் ஓரிரு ஆண்டுகளிலேயே மாறுதலாகிச் சென்றுவிடுவார்களே தவிர, நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பணியாற்றிய வரலாறு இல்லை. மேலும், அங்கிருந்து மாறுதலாகிச் செல்பவர்கள் கூட வேறு மாவட்டத்திற்கு ஆட்சியராகச் செல்வதில்லை; மாறாக, பிரம்மாண்ட அரண்மனை அறையில் அமர்ந்திருந்தவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திற்குச் சென்று சிறிய அலுவலக அறைகளுக்குள் முடங்கிவிடும் சூழலே நிலவுகிறது.

 

“அதிகாரம் என்பதும் அரசாட்சி என்பதும் என்றென்றும் நிலைத்தன்மை உடையது அல்ல; காலம் எதையும் நிரந்தரமாக வைத்திருக்காது என்பதற்கு நேரடி சாட்சியாக இந்த புதுக்கோட்டை அரண்மனை இன்றும் கம்பீரமாக நிற்கிறது” என்று குறிப்பிட்டுள்ள எம்.எம்.அப்துல்லா, விஜய் மீது விமர்சனக் கணைகளைத் தொடுத்துள்ளார். ஜோதிடர்களின் சொற்படி இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அரண்மனை வளாகத்தில் இன்று காலடி வைக்கும் விஜய், எத்தனை நாட்களுக்கு முதல்வராக இருப்பார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் எனத் தனது பாணியில் எதிர்-ஜோசியம் கூறி பதிவை நிறைவு செய்துள்ளார்.