கோவையில் திராவிடர் கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட தந்தை பெரியார் அறிவுலகம் திறப்பு விழா மற்றும் பாராட்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக அரசு மற்றும் முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகளை மிகக் காட்டமாக விமர்சித்துப் பேசினார். திமுக ஆட்சியில் சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், கோவையில் பெரியார் அறிவுலகம் எனப் பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டதை நினைவுகூர்ந்த அவர், தவெக அரசு அந்த வளர்ச்சித் திட்டங்களையெல்லாம் ரத்து செய்து மூடுவிழா நடத்தப் பார்ப்பதாகக் குற்றம்சாட்டினார். மேலும், கோவையில் 99 சதவீத பணிகள் நிறைவடைந்திருந்த காரணத்தினால் மட்டுமே, வேறு வழியின்றி ஜோசியர் குறித்த தேதியில் வந்து அரைகுறையாக இதனைத் திறந்து வைத்துள்ளதாகச் சாடினார்.
முதலமைச்சரின் செயல்பாடுகள் மற்றும் பின்னணியில் இயங்கும் சக்திகள் குறித்துப் பேசிய ஸ்டாலின், “முதலமைச்சர் என்ன உடை அணிய வேண்டும், அலுவலகம் எங்கு அமைய வேண்டும் என்பதையெல்லாம் ஜோசியர்தான் தீர்மானிக்கிறாரா?” எனக் கேள்வி எழுப்பினார். பதவியேற்பின் போது ‘பவர் சென்டரே இருக்காது’ என்று கூறிய நிலையில், இன்று முதலமைச்சரையே பொம்மையாக்கிவிட்டு, அவருக்குப் பின்னால் இருக்கும் கார்ப்பரேட் சக்தி மையங்களே இந்த ஆட்சியை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றன என்றும் சாடினார். முதலமைச்சர் பதவி என்பது சினிமா படப்பிடிப்புக்குக் கால்ஷீட் கொடுத்துவிட்டு செட்டுக்கு வந்து வேஷம் போட்டுவிட்டுப் போகிற வேலை அல்ல என்றும், காலையில் 10 மணிக்கு வந்துவிட்டு 5 மணிக்குக் கிளம்பிச் செல்வதற்கும், சனி ஞாயிறு விடுமுறை எடுப்பதற்கும் இது ஒன்றும் ஆபீஸ் வேலை கிடையாது என்றும் “அங்கிள் விஜய்” இதற்குப் பதில் சொல்லியே தீர வேண்டும் என்றும் கடுமையாகத் தாக்கினார்.
மாநிலத்தின் தற்போதைய சட்ட ஒழுங்கு மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் குறித்துப் பேசுகையில், ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் தமிழகத்தில் செயற்கையான மின்வெட்டு நாடகத்தை அரங்கேற்றி வருவதாகவும், மின்மயானங்களில் கூட உடல்களை எரிக்க முடியாமல் மக்கள் தவிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். குறைந்த விலைக்கு வாங்கப்பட்ட மின்சார ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு, வெளிச்சந்தையில் இருமடங்கு அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதற்காகவே இந்த நிலைமை உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். அதேபோல, 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நேரத்தில் சிறையிலிருந்து கைதிகள் தப்பி ஓடும் அளவிற்குச் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், “ஃபைலைத் திறப்போம் என்று கூறிவிட்டு இப்போது ஜெயிலைத் திறந்துவிட்டுக்கொண்டிருக்கிறார்கள்” எள்ளி நகையாடினார்.
மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகளின் சோதனைகள் மற்றும் இடைத்தேர்தல் களம் குறித்துக் குறிப்பிட்ட திமுக தலைவர், திருச்சி இடைத்தேர்தலை முன்னிட்டு நேருவின் இல்லத்தில் மீண்டும் மீண்டும் ரெய்டு நடத்தப்படுவதாகத் தெரிவித்தார். இத்தகைய மிரட்டல்களுக்கெல்லாம் திமுக ஒருபோதும் அஞ்சாது என்றும், அழுத்த அழுத்தத்தான் பந்து போல மேலே எழுவோம் என்றும் உறுதியாகத் தெரிவித்தார். ஐந்து ஆண்டுகளில் அடைய வேண்டிய அவமானத்தை வெறும் அஞ்சே மாதங்களில் அடைந்துவிட்டு, வெட்கமே இல்லாமல் ‘வெற்றித் தமிழன்’ என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள் என்று தவெக அரசைக் கடுமையாகச் சாடித் தன் உரையை முடித்தார்.
