“நான் அந்த குழந்தைய பார்த்தேன்”…. “நாமக்கல்லில் ஹேமலதா?”…. சிபிசிஐடிக்கு கிடைத்த அந்த 1 கால்… நடுநடுங்க வைக்கும் அடுத்தடுத்த சம்பவங்கள்….!

By Nanthini on கார்த்திகை 5, 2026

Spread the love

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா, கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி அதிகாலையில் திடீரென மாயமானார். உள்ளூர் காவல்துறையினர் சுமார் 10 நாட்கள் தீவிரமாகத் தேடியும் எந்தவொரு துப்பும் கிடைக்காததால், இவ்வழக்கின் விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, சிறுமி படித்த அரசுப் பள்ளியிலேயே முகாம் அலுவலகம் அமைத்து சிபிசிஐடி போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். சிறுமியின் தாய் பவானி, தந்தை வடிவேலு மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தியதுடன், பழைய குற்றவாளிகள், சந்தேகத்திற்குரிய நபர்கள் மற்றும் நள்ளிரவில் அப்பகுதியைக் கடந்து சென்ற 14 நேஷனல் பெர்மிட் லாரிகளின் ஓட்டுநர்களிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

சுமார் 20 நாட்களுக்கும் மேலாகச் சிறுமியைத் தேடி வரும் சிபிசிஐடி போலீசார், ஹேமலதாவின் புகைப்படங்களை அனைத்து மாவட்டங்களுக்கும் பிற மாநிலங்களுக்கும் அனுப்பித் தகவல்களைச் சேகரித்து வருகின்றனர். காடுகள் மற்றும் சுடுகாடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை நடைபெற்று வரும் சூழலில், கரூர் பகுதியில் சிறுமியைப் பார்த்ததாகக் கிடைத்தத் தகவலைத் தொடர்ந்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால், அதில் காணப்பட்ட குழந்தை ஹேமலதா இல்லை என்பது உறுதியானதால் தேடுதல் பணி தொடர்ந்து நீடித்து வருகிறது.

   

இந்நிலையில், நாமக்கல்லைச் சேர்ந்த அங்கன்வாடி சமையலரான பவானி என்ற பெண் அளித்தத் தகவல் இவ்வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி சேந்தமங்கலம் அருகே உள்ள தத்தகிரி முருகன் கோவிலுக்குச் சென்றபோது, வயதான தம்பதியினருடன் மாயமான ஹேமலதாவைப் போன்ற தோற்றமுடைய சிறுமி ஒருவரைப் பார்த்ததாக அவர் தெரிவித்துள்ளார். இத்தகவலை உடனடியாக அவசர கட்டுப்பாட்டு எண் 100-க்குத் தெரிவித்ததை அடுத்து, நாமக்கல்லில் இச்சம்பவம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

   

பவானி அளித்த தகவலின் அடிப்படையில், விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி போலீசார் உடனடியாக நாமக்கல்லுக்கு விரைந்து சென்று அவரிடம் விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். கோவிலில் பார்த்தது உண்மையில் காணாமல் போன ஹேமலதா தானா மற்றும் கிடைத்தத் தகவலின் நம்பகத்தன்மை என்ன என்பது குறித்து சிசிடிவி காட்சிகள் மற்றும் அப்பகுதியிலுள்ள நபர்களிடம் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.