உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஆசிரியை ராணி விஸ்வகர்மா கொலை செய்யப்பட்ட வழக்கில், அப்பள்ளியின் மேலாளர் விஜய் நிஷாத் என்பவரை காவல்துறை கைது செய்துள்ளது. திருமணத்திற்கு வற்புறுத்தியதால் ஏற்பட்ட தகராறில், காரின் நடு சீட்டில் வைத்து ஆசிரியையின் கழுத்தை நெரித்து விஜய் நிஷாத் படுகொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலை செய்த பிறகும் சலனமின்றி செயல்பட்ட குற்றவாளி, ஆசிரியையின் சடலத்தை தனது காரின் டிக்கியில் மறைத்து வைத்துள்ளார். பின்னர் அந்த உடலுடனேயே நாள் முழுவதும் பல இடங்களுக்கு காரை ஓட்டிச் சென்று சுற்றித் திரிந்துள்ளார். இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், அதை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆசிரியையின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக முயன்ற பள்ளி மேலாளர் விஜய் நிஷாாதை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
