கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள பாலி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் கவிதாஸ் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த பட்டதாரிப் பெண்ணான கிருஷ்ணவேணி ஆகிய இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டுச் சென்ற கிருஷ்ணவேணி திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த சூழலில், மாயமான அப்பெண் எதிர்பாராத விதமாக அப்பகுதியில் உள்ள உறவினர் ஒருவரது கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். தகவலறிந்து வந்த காவல்துறையினரும் தீயணைப்புப் படையினரும் அவரது உடலை மீட்டு, உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர்.
தான் நேசித்த காதலி பிணமாக மீட்கப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்டு கவிதாஸ் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். காதலியின் பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியாத அவர், கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அடுத்துள்ள காட்டுப்பரூர் பகுதிக்குச் சென்று அங்குள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டுத் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவர்களது காதல் விவகாரத்திற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த விபரீத முடிவை தேடினார்களா அல்லது இந்த தற்கொலைகளுக்குப் பின்னால் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தற்போது தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
