விருதுநகர் ஒண்டிப்புலி பகுதியில் கஞ்சா பயன்படுத்திய நபர்கள் குறித்து தகவல் தெரிவித்து சிறுவர்களை கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் இருக்கக்கூடிய நபர்கள் அனைவரும் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் என்பதுதான் மிகப்பெரிய அதிர்ச்சி. விருதுநகர் மாவட்டம் ஒண்டிப்புலி நாயகனூர் கிராமத்தில் சிறுவர்கள் கஞ்சா பயன்படுத்தியது குறித்து அதே பகுதியை சேர்ந்த வேறு சில சிறுவர்கள் வீட்டிற்கு தெரிவித்ததாகவும், அதனால் ஆத்திரமடைந்த சிறுவர்கள் தாங்கள் கஞ்சா பயன்படுத்தியது குறித்து எதற்காக வீட்டில் கூறினீர்கள் என அந்த இரண்டு சிறுவர்களையும் கெட்ட வார்த்தையால் திட்டி கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழகத்தில் தற்போது கஞ்சா விற்பனை அதிகரித்து வரும் நிலையில் சிறுவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி வீட்டிற்கு தெரிவித்த சிறுவர்களை தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. தமிழக அரசும் காவல்துறையும் இந்த விவகாரங்களை கையில் எடுத்து சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து உள்ளது.
மேலும் கொடூரமாக தாக்குதலில் ஈடுபட்ட சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தாமல் இருதரப்பையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் காவல்துறையினர். இது மேலும் பல காலத்திற்கான வெறுப்பையும் பகையையும் வளர்ப்புமே தவிர தீர்வு கிடையாது என பலரும் தெரிவித்து வருகிறார்கள்.
