“விஜய் கேபினட்டில் ‘யார் பெரிய ஆள்?… போட்டி… இரண்டு பெண் சிங்கங்களின் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஒற்றை செல்ஃபி”… தவெக அமைச்சர்கள் கொடுத்த நெத்தியடி பதில்

By Nanthini on ஆனி 29, 2026

Spread the love

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு முன்னணி பெண் அமைச்சர்களுக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக அண்மையில் ஊடகங்களில் வெளியான செய்திகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. விருதுநகர் மாவட்டப் பொறுப்பு அமைச்சரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான ஜெகதீஸ்வரி (ராஜபாளையம் எம்எல்ஏ), அரசு விழா ஒன்றில் புரோட்டகால் (Protocol) முறைப்படி தனது பெயர் முதலில் இடம்பெறாதது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அதிருப்தி வெளியிட்டதே இந்த விவாதங்களுக்குக் காரணமாக அமைந்தது.

   

கடந்த ஜூன் 26 அன்று விருதுநகரில் நடைபெற்ற சிலம்ப வீரர்களுக்கான பரிசு வழங்கும் விழாவின் மேடைப் பதாகையில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் (சிவகாசி எம்எல்ஏ) பெயர் முதலிலும், மாவட்டப் பொறுப்பு அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பெயர் இரண்டாவதாகவும் அச்சிடப்பட்டிருந்தது. இதனால் அதிருப்தியடைந்த அமைச்சர் ஜெகதீஸ்வரி, “புரோட்டகால் தெரியாதா? பலமுறை சொல்லியாச்சு” என மேடையிலேயே மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாகக் கடிந்து கொண்டார். இனி இப்படி நடக்காது என ஆட்சியர் சமாதானப்படுத்திய இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி, இரு அமைச்சர்களுக்கும் இடையே ‘யார் பெரியவர்?’ என்ற அதிகாரப் போட்டி நிலவுவதாக ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டது.

இந்த ஊடகக் கட்டுக்கதைகளுக்கும், வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அமைச்சர்கள் கீர்த்தனாவும் ஜெகதீஸ்வரியும் இணைந்து தங்களது அதிகாரப்பூர்வப் பக்கத்தில் ஒரு ‘செல்ஃபி’ புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். அத்துடன், “அடுத்த கட்டுக்கதையிலாவது நல்ல அதிர்ஷ்டம் அமையட்டும்” (Better luck with the next fiction) என்று அமைச்சர் கீர்த்தனா பதிவிட்டு, தங்களுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதையும், தாங்கள் என்றும் நல்ல தோழிகள் என்பதையும் நாசூக்காக உணர்த்தி ஊடகங்களின் வாயை மூட வைத்துள்ளார்.

   

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, “ஒரு கூட்டு கிளியாக, ஒரு தோப்பு குயிலாக…” என்ற ரீதியில் இந்த விவகாரத்தைச் சுமுகமாக முடித்து வைத்துள்ளது. எனினும், பொதுவெளியில் பேசும் போதும், அரசு அதிகாரிகளிடம் நடந்து கொள்ளும் விதத்திலும் தவெக அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் இன்னும் கூடுதல் கவனத்துடனும், கண்ணியத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என்பதே தவெக ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.