“மக்களே மாபெரும் ஊழல்வாதிகள்” மேடையிலேயே வெடித்த தவெக அமைச்சர்… அதிர்ச்சியில் தமிழகம்…!

By SATHISH R on ஆனி 29, 2026

Spread the love

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் புதிய ஆட்சி அமைந்துள்ள சூழலில், அக்கட்சியைச் சேர்ந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ-வும், தற்போதைய கேபினட் அமைச்சருமான எம். விஜய் பாலாஜியின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் காட்டுத்தீயாய் பரவி பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. முதலமைச்சர் ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் பவானியில் நடைபெற்ற சமபந்தி விருந்து மற்றும் தூய்மை பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இந்த சர்ச்சை கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

   

பொதுமேடையில் பேசிய அமைச்சர் விஜய் பாலாஜி, “கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் ஊழல் செய்வதைப் பற்றிப் பார்த்திருப்பீர்கள். ஆனால், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்களாகிய நீங்கள் செய்ததுதான் மிகப்பெரிய ஊழல். வாக்காளர்கள் வாங்க வேண்டிய இடத்தில் பணத்தை வாங்கிக்கொண்டு, வாக்குச் சாவடியில் வேறு ஒருவருக்கு வாக்களித்து விட்டார்கள். வாங்க வேண்டிய இடத்தில் வாங்கிட்டு, குத்த வேண்டிய இடத்தில் சரியாக குத்தி நமது ஆட்சியை அரியணையில் கொண்டு வந்து உட்கார வைத்திருக்கிறீர்கள்; அரசியல்வாதிகளை விட மக்களே பெரிய ஊழல்வாதிகள்” எனப் பேசியுள்ளார். அவர் பேசும்போது அரங்கில் இருந்த கட்சித் தொண்டர்களிடையே கைதட்டலும் சிரிப்பலையும் எழுந்தாலும், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்பொழுது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

   

அமைச்சரின் இந்த அதிரடிப் பேச்சுக்கு ஆதரவாகவும் எதிராகவும் அரசியல் களத்தில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தவெக ஆதரவாளர்கள் தரப்பில், “தேர்தலில் மக்கள் தங்களுக்கு அளித்த பேராதரவைக் குறிப்பிடும் வகையில், நகைச்சுவை கலந்த உவமையாகவே அமைச்சர் அவ்வாறு பேசினார்; மக்களின் சாதுரியத்தை பாராட்டும் தொனியிலேயே அது அமைந்திருந்தது” என்று விளக்கம் அளிக்கப்படுகிறது. இருப்பினும், ஆளும் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒரு கேபினட் அமைச்சர் பொதுவெளியில் வாக்காளர்களை “ஊழல்வாதிகள்” என்று விளிப்பது முறையானது அல்ல என்று பல தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

 

தேர்தல் நடைமுறைகள், வாக்காளர்களின் நேர்மை மற்றும் ஜனநாயகம் குறித்து ஆளும் தரப்பு அமைச்சரே இவ்வாறு பேசியிருப்பது அரசியல் ரீதியாக பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தூய்மை பணியாளர்களைக் கௌரவிக்கும் ஒரு சமூகநல விழாவாகத் தொடங்கிய இந்த நிகழ்வு, அமைச்சரின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சால் மாநில அரசியல் களத்தில் ஒரு புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் இதனை மிகக் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், இந்த விவகாரம் அடுத்த சில நாட்களுக்குத் தமிழக அரசியலில் முதன்மையான பேசுபொருளாக நீடிக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.