முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாற்றுக்கட்சியினரின் விமர்சனங்களுக்கு காட்டமாக பதிலளித்தார். அப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளின் விமர்சனங்களை சாடிய அவர், அமைச்சர் ரமேஷின் ‘பாப்பா மாடல்’ என்ற விமர்சனத்தை கண்டித்து பேசினார். அந்த சமயத்தில், “நான் பாப்பாவுக்கு பதில் சொல்ல மாட்டேன்” என்று அவர் கூறிய வார்த்தை, உச்சரிப்பு குறைபாட்டால் “பாப்பானுக்கு பதில் சொல்ல மாட்டேன்” என்பது போல ஊடகங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு உடனடியாக விளக்கமளித்த ஆர்.எஸ்.பாரதி, தனது ‘டோன்’ சரியாக இல்லாததால் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் என்றும், தான் ‘பாப்பாவுக்கு’ என்றுதான் குறிப்பிட்டதாகவும் மறுப்பு தெரிவித்தார்.
இருப்பினும், இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ள நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் திமுகவிற்கு எதிராக மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். “பாப்பானுக்கு பதில் சொல்ல மாட்டேன் என சொல்பவருக்கு முதலில் எனக்கு பதில் சொல்ல திராணி இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், தான் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, தளபதி மக்கள் இயக்கத்தில் உழைத்து, பெரியார், அம்பேத்கர், காமராஜர் போன்ற தலைவர்களின் கொள்கைகளைப் பின்பற்றி பதவிக்கு வந்தவன் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், திமுகவினர் பெரியாரை வழிகாட்டி என்று சொல்லிக்கொண்டு, சமூக நீதி என்ற போலி வேடமிட்டு வாக்கு அரசியலுக்காக சாதியை வைத்து பிழைப்பு நடத்துவதாகவும் அவர் அதிரடியாக விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து திமுகவை சாடிய அமைச்சர் ரமேஷ், தவெக தலைவர் விஜய்யின் வழிகாட்டுதலில் சாதி, மதங்களை கடந்து உண்மையான சமூக நீதிப் பாதையில் தங்களது இயக்கம் மக்கள் பணி செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். சாதியை வைத்து திமுக நடத்தும் போலி அரசியலுக்கு தந்தை பெரியாரின் தடி மூலம் தேர்தலில் மக்கள் தகுந்த தோல்வி அடியை கொடுத்துள்ளார்கள் என்பதை ஆர்.எஸ்.பாரதி நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். தங்களைப் போன்ற கொள்கைப்பிடிப்போடு உழைத்து வந்தவர்களுக்கு எதிராக, ஒரு குடும்ப ஆதிக்கத்திற்கு கொத்தடிமைகளாக வாழும் திமுகவினருக்கு தங்களை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது என்று அமைச்சர் ரமேஷ் எழுப்பியுள்ள கேள்வி தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
