அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் உட்கட்சி பூசல்கள் மற்றும் குழப்பங்களுக்கு மத்தியில், அக்கட்சியில் இருந்து மேலும் ஒரு முக்கிய நிர்வாகி விலகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான பொன். ஜெயசீலன், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பியுள்ளார்.
தன் முடிவிற்கான காரணமாக, தற்போதைய சூழலில் அதிமுகவில் தொடர்ந்து பயணிக்க இயலாத ஒரு அசாதாரண நிலை நிலவுவதாக அவர் தனது கடிதத்தில் சூசகமாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கூடலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், அண்மையில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் 22,833 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய நிலையில், தற்போது கட்சியை விட்டே வெளியேறியிருப்பது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
