பல்வேறு தணிக்கை சிக்கல்களைக் கடந்து முதலமைச்சர் அவர்களின் கடைசித் திரைப்படமான ‘ஜன நாயகன்’ நாளை வெளியாகவுள்ள நிலையில், சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் இதுகுறித்து உணர்ச்சிப்பூர்வமாகப் பேட்டியளித்துள்ளார். முதலமைச்சர் அவர்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பிருந்தே சினிமா மற்றும் பணிகளில் காட்டிய அதே தீவிர அர்ப்பணிப்பைத்தான் தற்போதைய ஆட்சியிலும் காட்டி வருகிறார் என்று குறிப்பிட்ட அவர், படப்பிடிப்பின் இறுதி நாளில் எமோஷனலாக இருந்ததால் கேக் வெட்டக்கூட அவர் மறுத்துவிட்டதாகத் தெரிவித்தார். மேலும், தானும் இப்படத்தில் ஒரு சிறு காட்சியில் நடித்திருப்பதாகவும், படம் பார்க்க மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய செய்தியாளர் ஒருவர், நாளை படம் பார்க்க விடுமுறை எடுப்பீர்களா எனக் கேட்டதற்கு, “அமைச்சர்களுக்கு 365 நாட்களும் விடுமுறையே கிடையாது, மக்களுக்காகவே உழைத்து வருகிறோம்” எனப் பதிலளித்தார். தான் கல்லூரி காலத்தில் நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகனாக இருந்து முதல் நாள் முதல் காட்சியே பார்த்துவிடும் வழக்கமுடையவர் என்றும், ஆனால் நாளை அரசு நிகழ்ச்சிகள் இருப்பதால் ‘ஜன நாயகன்’ படத்தின் முதல் நாள் காட்சியைக் காண முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
