தமிழக சட்டமன்றத்தில் கடந்த ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது, டாஸ்மாக் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளில் பார்ட்டி ஃபண்ட் என்ற பெயரில் மக்களின் வரிப்பணம் முறைகேடாகச் சுருட்டப்பட்டதாக முதலமைச்சர் விஜய் முன்வைத்த குற்றச்சாட்டு மாநில அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இக்குற்றச்சாட்டிற்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள், தகுந்த ஆதாரங்கள் இன்றி பொத்தாம்பொதுவாகப் பேசக்கூடாது எனக் கூறி அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இந்த மறுப்பைத் தொடர்ந்து, வழக்கமான அரசியல் மேடை விவாதமாக இதை விட்டுவிடாமல் சட்டப்பூர்வ ஆதாரங்களுடன் களமிறங்க தவெக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளை வெறுமனே வாய்மொழி அறிக்கையாக விட்டுவிடாமல், வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அதிகாரப்பூர்வ அறிக்கையாகச் சமர்ப்பிக்க முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காக, தலைமைச் செயலக மூத்த அதிகாரிகள் மற்றும் நிதி, மதுவிலக்குத் துறை அதிகாரிகளுக்கு அவர் நேரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளில் அரசு கருவூலத்திற்கு வர வேண்டிய வருவாய் எங்கு, எப்படித் திருப்பப்பட்டது, ஒப்பந்தப் புள்ளிகளில் நடந்த முறைகேடுகள் மற்றும் வசூலிக்கப்பட்ட தொகைகள் தொடர்பான முழுமையான விவரங்கள் மற்றும் கோப்புகளை உடனடியாகத் திரட்டுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கவுள்ள தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் மிகுந்த அரசியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அமர்வின் போது எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில், திரட்டப்பட்ட அனைத்து ஆதாரங்களையும் ஆவணங்களையும் சட்டமன்றத்தில் சமர்ப்பிக்க ஆளுங்கட்சி ஆயத்தமாகி வருகிறது. “நாங்கள் ஆட்சிக்கு வந்தது மக்கள் சேவை செய்யத்தானே தவிர, கமிஷன் அடிக்க அல்ல” என்று பேரவையில் முழங்கிய முதலமைச்சர் விஜய், இந்த ஆதாரங்களை வெளியிடுவதன் மூலம் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தீவிர வியூகம் அமைத்து வருகிறார்.
