ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் கடலுக்கு அடியில் வீசப்பட்டுள்ள கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்து அகற்றுவதில் பெரும் சிக்கல் நீடிப்பதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. கடலின் மேற்பரப்பில் மிதந்த கண்ணிவெடிகளை ஈரான் கடற்படை அகற்றிய போதிலும், சில நூறு அடி ஆழத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள கண்ணிவெடிகள் பெரும் சவாலாக மாறியுள்ளன. இதனால், அந்தப் பாதையில் கப்பல் போக்குவரத்தை முழுமையாகத் தொடங்குவதில் தொடர்ந்து முட்டுக்கட்டை நீடித்து வருகிறது.
இதற்கிடையே, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் சர்வதேச அளவில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. பேச்சுவார்த்தை முறிந்ததையடுத்து, ஹார்முஸ் நீரிணையைத் தனது கடற்படை மூலம் முற்றுகையிடப் போவதாக அமெரிக்கா ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் போர் மேகங்கள் காரணமாக உலக நாடுகளின் கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
