கேரள மாநிலம் கொச்சியில் 17 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார், ஸ்கூட்டர் மீது பலமாக மோதியதில் 55 வயது வியாபாரி பரிதாபமாக உயிரிழந்த கோர விபத்து தொடர்பாக, அச்சிறுவனின் தந்தையான இரிஞ்சாலகுடா கூடுதல் மாவட்ட நீதிபதியை காவல்துறையினர் எதிரியாகச் சேர்த்து வழக்குப் பதிவு செய்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொச்சியில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், ஓட்டுநர் உரிமம் இல்லாத 17 வயது சிறுவனுக்கு சொகுசு காரைக் கொடுத்து அனுப்பியதற்காக அவனது தந்தையான கூடுதல் மாவட்ட நீதிபதி மீதே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விபத்தில் 55 வயது நிரம்பிய வியாபாரி ஒருவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. “அதிகாரத்தில் இருந்தாலும், எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமமே; எந்தப் பின்புலமும் குற்றவாளிகளைக் காப்பாற்றக் கூடாது” எனக் கருத்து தெரிவித்து வரும் நெட்டிசன்கள், ஒரு மாவட்ட நீதிபதி எவ்வாறு பல லட்சங்கள் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்க முடிந்தது என அவரது சொத்து விவரங்கள் குறித்தும் காரசாரமான கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து கொச்சி காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
