காவலர்களின் சீருடை கிழிக்கப்பட்டதாக வதந்தி…  வாகனம் மோதியதால் வெடித்த மோதல்… வைரல் வீடியோ குறித்து மீரட் போலீசார் எச்சரிக்கை…!!

By Devi Ramu on ஆவணி 4, 2026

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகே ஹரித்வாரில் இருந்து புனித நீர் எடுத்து வந்த கான்வரியா பக்தர் ஒருவர் மீது, சோனு என்பவரின் இருசக்கர வாகனம் மோதியதால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கான்வரியாகள் சிலர், போலிஸ் வாகனத்திற்கு அருகிலேயே அந்த நபரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, போலீஸாரையே கான்வரியாகள் தாக்கி ஆடைகளைக் கிழித்துவிட்டதாகத் தவறான தகவல்களுடன் வேகமாகப் பரவியது.

இந்த வதந்திக்கு மறுப்பு தெரிவித்துள்ள மீரட் போலீசார், தாக்குதலில் எந்தவொரு காவலரும் காயமடையவில்லை என்றும், தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர். தகவலறிந்து உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்து காயம் அடைந்த நபருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். தற்போது இருதரப்பிலும் எவ்விதப் புகாரும் அளிக்கப்படாத நிலையில், அப்பகுதியில் சட்டம் – ஒழுங்கு சீராக உள்ளதாகக் காவல் துறை தெளிவுபடுத்தியுள்ளது.